Tag Archive | Jesus Christ

தாய்மதம் திரும்பும் இந்துக்கள்..!


// திருநெல்வேலி:

பிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வதி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.

இது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், “”இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.

மதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. “இந்தியாவில் அறுவடை’ என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வழிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது.

எனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா… அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா… என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். //

http://www.dinamalar.com/district_detail.asp?id=172793

மேற்கண்ட தினமலர் பத்திரிகையின் விஷமமான செய்தியை வாசித்ததும் பயங்கரமான சிரிப்பு வந்தது;மீனவர்கள் கடலுக்குச் சென்று வலைவீசி மிகுந்த பிரயாசத்துடன் மீன்பிடிக்கிறார்கள்;அப்படி பிடிக்கப்பட்ட மீன்களிலிருந்து சிலது கரையேறும் முன்பே துள்ளி கடலில் வீழும்;அங்கே அவற்றை விழுங்க திமிங்கலங்கள் காத்திருக்கும்;அதுபோலவே மனித வாழ்க்கை என்பது உள்ளேயும் சரி, வெளியேயும் சரி துன்பங்கள் நிறைந்தது;அநித்தியமானது;இதில் எங்கே இருந்தால் என்ன‌?

ஏன் சிரிப்பு வந்தது என்றால் இந்த நாளிதழ் நல்ல தரமான நிருபர்களை உடையதானாலும் இந்த குறிப்பிட்ட செய்தியின் வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,இதில் பக்கத்தை நிரப்ப எதையாவது எழுதவேண்டுமே..!

இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக இந்துக்களின் தொகை வேகமாக குறைந்து வருகிறதாம்;மேலும் மதமாற்றத்தின் காரணமாகவும் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாம்;மதம் மாறியவர்கள் இந்தியாவில் தானே இருக்கிறார்கள்? அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும்? இந்த தேசபக்தர்கள் இந்தியாவை சுரண்டி வெளிநாடுகளில் இலட்சம் கோடிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்களே,அதுவல்லவா இந்தியாவை பெலவீனப்படுத்தும்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்தபோது அதில் முக்கிய குறிப்பாக வைத்தது,பெண்களையும் குழந்தைகளையும் மதம் மாற்றக்கூடாது என்பதே;ஆனால் இங்கே 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதம் மாறினார்களா;இது கேலிக்கூத்தாக இல்லையா? குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது? எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக‌.

மூத்த அப்போஸ்தலர் செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்..!


Senior Chennai Pentecost Leader Rev, P.S.Chelladurai F/O Rev. Sam P. Ch expired at 7.15 p.m. Sunday (5/12). He is 88 yrs.His Funeral service tomorrow 2.30 p.m.at AFT church, Purasavakkam. Burial at 4.30 p.m. at Kilpauk. www.revsam.org

Pls Fwd to all…Thank You..!

PSC4.png

Pastor P. S. Chelladurai – The founder of AFT Church and father of Rev. Sam P. Chelladurai, passed into glory on 05-12-2010 at 07:15pm in Chennai. The funeral service will be held at 02:30pm in AFT Church on Tuesday (07-12-2010). Burial will be in Kilpauk Cemetery at 04:30pm. The service will be webcast LIVE.

பெந்தெகொஸ்தே இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மூத்த அப்போஸ்தலருமான செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்; நேற்று மாலை 07:15 க்கு அவருடைய உயிர் பிரிந்தது; நாளை மாலை 04:30 மணிக்கு அவருடைய நல்லடக்கம் நடைபெறுவதாக அறிகிறோம்.

ஐயா அவர்கள் தனது  88 வது வயது வரையிலும் நல்ல நினைவாற்றலுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது;அவர்கள் தனது விசுவாசத்தைத் தூண்டும் போதனைகளால் அநேகரை எழுப்பியதுடன் தனது பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்தம் சந்ததியையும் கண்டு ஒரு முழுமையான வெற்றிகரமான கிறித்தவ ஜீவியத்தை நிறைவேற்றினார்.

அவர் தனது துணைவியாருடன் கொண்டிருந்த உத்தமமும் சமாதானமும் நிறைந்த‌ இல்வாழ்க்கை மிகவும் போற்றுதற்குரியது; இளந்தலைமுறையினர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியானது; பிரபல போதகர் சாம்.P.செல்லத்துரை அவர்கள் அன்னாரது மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்த்தருடைய வருகையில் நாம் அவரை சந்திப்போம் என்ற விசுவாசத்துடன் நம்முடைய சபையின் தலைவருக்கு நமது இறுதி மரியாதையினை செலுத்துகிறோம்;அவர்மூலமாக நாம் கற்றுக்கொண்ட நல்ல விசுவாச போதனைகளுக்காக ஆண்டவருக்கு துதி செலுத்துகிறோம்.

கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை..!


இன்று (2pm) எனது நண்பர் பாலன் பால்ராஜ் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது வெளிப்பட்ட சிந்தனை…

‘ கடவுள் இல்லை ‘ என்று சொல்கிறவர்களை நாத்திகர் என்கிறோம்; நாத்திகர் கடவுள் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமா,அது ஏற்புடையதா என்று யோசிப்பதற்கு முன்னர் ” கடவுள் இல்லை ” எனும் கொள்கையிலுள்ள இல்லை என்ற சொல்லுக்குரிய கொள்கையை ஆராயவேண்டுமல்லவா?

இல்லை என்பதைக் குறித்த விளக்கம் ஆங்கிலத்தில் Absence of Something என்றும் Something that does not exist என்றும் கூறப்பட்டுள்ளது; இதன்படி இருக்கும் ஏதோ ஒன்று இல்லாமலிருப்பதே இல்லை (What is Something ? and what is Nothing ?) என்பதன் கொள்கையாம்;

உதாரணத்துக்கு, என் கையில் பணமில்லை என்றோ என் பாக்கெட்டில் அல்லது என் சட்டை பையில் பணமில்லை என்றோ சொல்வோமானால் பணம், இல்லை எனும் இரு சொற்களில் பணம் என்பதைக் குறித்து அறிந்திருந்தாலே அது இல்லை என்று சொல்லமுடியும்;

பணத்தின் அருமை யாருக்கு தெரியும்,அதனைப் பயன்படுத்தியவருக்கே அல்லவா? மனநிலை சரியில்லாதோருக்கும் குழந்தைகளுக்கும் பணத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது;

பணம் என்பது என்ன, அதை யார் உண்டாக்கினார், அதன் நோக்கம் என்ன, அதன் அவசியம் என்ன‌ போன்ற அம்சங்களே பணம் என்ற சொல்லின் ஆதாரமாக இருக்கிறது; அதனை உணர்ந்த பின்னரே அது இல்லாததைக் குறித்து அறிந்தோ அல்லது வருந்தியோ அது இல்லை என்று கூறமுடியும்;

இதுபோலவே கடவுள் இல்லை என்று கூறுவதற்கு முன்னர் அவர் யார் என்ற கொள்கையைக் கூறிய பிறகே அவர் இல்லை என்று கூறமுடியும்; கடவுளைக் குறித்து எதுவும் தெரியாமலே கடவுள் இல்லை என்பது ஒரு பொருளைக் குறித்து இல்லை என்று சொல்லக்கூடிய ஆதாரக் கொள்கைக்கு முரணானது ஆகும்; இல்லாத ஒன்றை இல்லை என்று கூறவேண்டிய அவசியமென்ன‌?

No God, No Peace; Know God, Know Peace..!

இப்போதைக்கு எனக்கு ” ஞானம் இல்லை “என்று வைத்துக்கொள்வோமா..?

திருநங்கைகள் Part.2


திருநங்கைகள் சம்பந்தமாக அண்மையில் தமிழ் கிறித்தவ தளத்தில் நாம் அளித்த பின்னூட்டம்…

அன்பு நண்பர் சரவ் அவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்ட திருநங்கைகள் சம்பந்தமான எனது கட்டுரையை தொடுப்பில் சென்று பார்க்கவும்;

https://chillsam.wordpress.com/2009/11/12/eunuch/

நண்பரே, 1.கொரிந்தியர் .5 திருநங்கைகளுக்காகவே எழுதப்பட்டதைப் போலக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்; அது மீட்கப்பட்ட சபைக்காக எழுதப்பட்டதாகும்.

// வேதம் நமக்கு இவ்வாறு நமக்கு சொல்லியிருக்க நாம் எப்படி திருநங்கைகள் என்று சொல்லபடுகின்ற நபர்களோடு அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் கர்த்தருக்குள் ஐக்கியம் கொள்ள முடியும்.அவர்கள் சபையில் வரலாம் வேத வார்த்தையை கேட்கலாம் ஆனால் தங்கள் பாவ கிரியைகளை விட்டு மனந்திரும்பாத பட்சத்தில் எப்படி ஐக்கியம் கொள்ள முடியும் என்று தெரியவில்லை.//

மற்ற சாதாரண மனிதர்களோடு பழகி உறவாடி வியாபாரம் செய்து ஐக்கியம் கொள்ளும் போதும் இதே உணர்வு உங்களுக்கு உண்டாகுமா; அவர்கள் மனந்திரும்பும் வரை காத்திருந்து ஐக்கியம் கொள்வதைப் போலவே இவர்களுடனும் நேசம் பாராட்டுவதில் என்ன தயக்கம்? சபைக்குட்பட்ட‌ மற்ற மனிதர்கள் பாவமே செய்யவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்? திருநங்கைகள் என்றாலே அந்தரங்கமாக மிகவும் மோசமானவர்கள் எனும் தவறான அபிப்ராயமே தங்களது அச்சத்துக்குக் காரணமாக இருக்கிறது; இந்த உலகிலுள்ள அனைவரையும் போலவே திருநங்கைகளும் பாவத் தன்மையில் பிறக்கிறார்கள் என்பதைத் தவிர அவர்கள் எந்த வகையிலும் மற்ற மனிதர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர்களல்ல‌.

இன்னும் சொல்லப்போனால் பாவத்தை நிறைவேற்றும் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட மாறுபாட்டினால் மனம் பேதலித்து துவண்டுபோய் தாழ்வு மனப்பான்மையினால் சமூகத்தைவிட்டு தள்ளப்பட்டவர்கள்; இதனால் பாவ சோதனைகள் குறைவானவர்கள்; அன்புக்காக ஏங்குபவர்கள்.

பின்குறிப்பு:

இதையெல்லாம் படித்துவிட்டு என்னை சந்தேகப்படவேண்டாம்…ஹி..ஹி..!

Part.2:2

//நாளைக்கே ஒரு திருநங்கை மனந்திரும்பாமல் (தன பாலிய தொழிலை செய்து கொண்டும்) ஞான ஸ்நானம் வேண்டும் என்றால் எப்படி நம்மால் கொடுக்க முடியும்.//

திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற எண்ணத்தை முதலில் தவிர்க்கவேண்டும் ;அடுத்து தங்கள் பாலியல் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள் என்ற பகுதி ;இவையெல்லாமே பரிசுத்தாவியைப் பெற்றவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நிதானமாக செயல்பட்டு போதனையின் மூலம் நிறைவேற்ற வேண்டிய எல்லைகளாகும் ;

வேதமே தெளிவாகக் கூறுகிறது,தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தோரும் உண்டு ;தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டோருமுண்டு’ என ; ஆம் ,நார்மலாகப் பிறந்து தேவனுடைய ராஜ்யத்துக்காகத் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டோர் என்பார் தவறு செய்யவில்லையா ,அதுவும் போகட்டும் ,மனதின் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அண்ணகர்களாக தேவபணியாற்றுவோரை விட தங்களை சரீர ரீதியான கெடுத்துக்கொண்டு தங்கள் ஆண்மையை இழந்தோரின் நிலைமை பரிதாபமல்லவா ,அவர்களுடைய மனமே இதைச் செய்யக் காரணமாக இருந்தது எனில் வேத வார்த்தையின்படி அவர்கள் மனம் புதிதாகுமானால் எத்தனை மேன்மையாக இருக்கும்..?

Part.2:3

// நீங்கள் என்ன சொல்ல வருகிறீர் என்று எனக்கு புரியவில்லை.பாலியல் தொழில் செய்து கொண்டு இருந்தாலும் அவர்களை சபையில் ஞான ஸ்நானம் கொடுத்து,கர்த்தரின் பந்தியில் பங்கு பெற சொல்கிறீகளா? அல்லது வேறு என்ன சொல்ல வருகிறீர். //

திருநங்கைகளுக்கென்று தனி சுவிசேஷமோ தனி அணுகுமுறையோ தேவையில்லை என்கிறேன்; பாலியல் தொழில் செய்வோரை வேதம் எப்படி அணுகுகிறதோ அப்படியே திருநங்கைகளையும் அணுகினால் போதுமென்கிறேன்;

பாலியல் தொழில் செய்யாவிட்டாலும் இங்குமங்கும் ஓரிரு காரியங்களில் சறுக்கிவிட்டு பந்தியில் பங்கேற்போர் இருக்கிறார்களல்லவா? பந்தியில் பங்கேற்பது பெரிய விஷயமல்ல; நீங்கள் தராவிட்டால் அவரைக் குறித்து அறியாத எங்கு வேண்டுமானாலும் அவர் பந்தியில் பங்கேற்கமுடியும்; எனவே தான் வேதம் அவரவருடைய மனசாட்சியை இங்கே நீதிபதியாக (1.கொரிந்தியர்.1:31) கூறுகிறது.

இன்னும் சில சபைகளில் கணவன் மனைவி சண்டையிட்டு வந்தாலும்கூட பந்தியிலிருந்து விலக்குவார்கள்; இதற்கெல்லாம் யாருக்கும் அதிகாரமில்லை; இது கிறித்துவுக்குள் விசுவாசிக்குக் கொடுக்கப்பட்டுள்ள சுயாதீனத்தைக் கேள்விக்குரியதாக்கிவிடும்; போதிக்கவும் ஜெபிக்கவும் மட்டுமே ஊழியருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது; ஆனால் இங்கே மனைவியை தள்ளிவிட்டு விசுவாசியாக இருக்கமுடியாது; ஆனால் போதகராக இருக்கலாமல்லவா..? தள்ளிவிடப்பட்டவளை விவாகம் செய்பவனும் அவளை தள்ளிவிட்டவனுமாகிய இருவருமே அவளை விபச்சாரம் செய்யப்பண்ணுகிறார்கள் என்று வேதம் கூறுகிறது.

சரி, மீண்டும் மையப் பொருளை நோக்கி வருவோம்…
திருநங்கைகள் இயல்பிலேயே பாவத்துக்கு அடிமைகளல்ல, அன்புக்கே அடிமைகள்; ஏனெனில் அவர்களுடைய உடற்கூறு அமைப்பே அப்படிப்பட்டதாகும்; மேலும் பிறப்பிலேயே திருநங்கைகளானவர்கள் மூலமே இடையில் மனநிலை காரணமாகத் தங்களைத் திருநங்கைகளாக மாற்றிக் கொண்டோரை சந்திக்கவேண்டும்.

கிறித்தவ விசுவாசத்தைப் போல திருநங்கைகளை முழுமையடையச் செய்யும் வேறொரு கொள்கை இந்த அகிலத்திலேயே கிடையாது என்பேன்; ஆனால் திருநங்கைகளைக் கவர்ச்சிப் பொருளாகவும் வியாபாரப் பொருளாகவும் வேடிக்கைப் பொருளாகவும் இந்த உலகம் பார்க்கிறது; எனவே தங்களை வஞ்சிக்கும் இந்த உலகைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒருவித மூர்க்கத்தனம் அவர்களுடைய குணாதியத்தையே மாற்றிவிடுகிறது;

எப்படி மிகவும் அழுக்காக இருக்கும் ஒரு துணியை மிக அதிக தண்ணீரும் சௌக்காரமும் போட்டு அதிக முயற்சியினால் வெளுக்கிறோமோ அதுபோலவே திருநங்கைகள் மிகவும் மோசம் என்று நீங்கள் நினைத்தால் அவர்களைவிட்டு விலகாமலும் விலக்கிவிடாமலுமிருந்து அவர்கள் தானியேல்,எஸ்தர் போன்ற பரிசுத்தர்களை நேசத்துடன் வளர்த்தவர்தம் வழிவந்தோர் என்ற பாசத்துடன் அணுகினால் போதும் என்கிறேன்.

(தொடருவேன்…)

நல்ல சமாரியன் ஓவன் ராபர்ட்ஸ் ஐயா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்..!


வலைதளத்தில் தமிழ் கிறித்தவம் மிகவும் பின் தங்கிருக்கிறதோ என்று யோசிக்கிறேன், வருந்துகிறேன்; ஒருவேளை எனக்குத் தேடத் தெரியவில்லையோ என்னவோ..!

நேற்று (15.20.2010) சென்னையில் காலமான மூத்த போதகர் ஓவன் ராபர்ட்ஸ் அவர்களைக் குறித்த எந்த செய்தியும் இணையதளத்தில் கிடைக்கவில்லை.

DSC_1641.JPG

அன்னார் தமது சரீர பெலவீனங்கள் மத்தியிலும் ஆண்டவருக்காக இடையறாது செய்த ஊழியங்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.

அவருடைய ஊழியத்தைக் குறித்து அறிந்தோர் அவர்தம் ஊழியத்தைக் குறித்த தகவல்களை இங்கே பதித்து அவருடைய ஊழியத்தைப் போற்றும் வண்ணமாக சாட்சிகளைப் பகிர அன்புடன் அழைக்கிறேன்.

மாயாவி ஜட்சன் ஆபிரகாம் கையில் விஷ்ணு சக்கரம்..!


இன்று (02.10.2010)காலையில் சுமார் 7மணிக்கு தமிழன் டிவி-யில் ஜட்சன் ஆபிரகாம் அவர்களின் சுவிசேஷ நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தேன்;

நிகழ்ச்சிக்கு முன்பதாக அவர்களுடைய வீரதீர பராக்கிரமங்களின் தொகுப்பாக வரும் க்ளிப்பிங்ஸ்…அதிலொரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு பயங்கரமான துணிகரம் அரங்கேறியது;

மாயாவி ஜட்சன் ஆபிரகாம் தனது வலது கரத்தை உயர்த்துகிறார்;அப்போது அவரது உள்ளங்கையிலிருந்து ஒரு நட்சத்திரம் போன்ற ஒளி தோன்றி வளர்ந்து விஷ்ணு சக்கரம் போல சுழல எதிர்புறம் நிற்கும் அப்பாவி பொதுஜனம் ‘பொத்’தென சரிந்து விழுகிறது;

இதுபோன்ற மோசடிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதாலும் என்னைப் போன்ற ஒருசிலர் எங்கோ ஒரு மூலையிலிருந்து புலம்பிவிட்டுச் செல்வதாலும் இதுபோன்ற மோசடியாளர்கள் தினவெடுத்து சுவிசேஷ மேடைகளை மாயதந்திர காட்சி மேடையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்;

இவர்கள் வேத சத்தியத்தை மறைத்து அதற்கு விரோதமாக செயல்படுவது இந்துமார்க்கப் பின்னணியிலிருந்து வரும் சாதாரண மக்களுக்கு இது பெரிய குற்றமாக இராது;ஆனால் வேதத்துக்குப் புறம்பான இதுபோன்ற செயல்கள் கண்டிக்கப்படாவிட்டால் அதாவது பணத்துக்காக இவர்களை அழைத்து கூட்டம் போடும் ஒருங்கிணைப்பாளர்கள் அதனைக் குறித்து எச்சரிக்காவிட்டால் தேவ பயங்கரம் இறங்கும்;

அவர் தமது நாமத்தை வீணிலே வழங்கும் ஒருவரையும் சும்மா விடவே மாட்டார்;வியாதியிலோ விபத்திலேயோ கொலைசெய்யப்பட்டோ இந்த துரோகிகள் வீழ்த்தப்படுவர்;அல்லது இந்து விரோதிகளால் முச்சந்தியில் வைத்து அவமானப்படுத்தப்படுவர்;அல்லது வருமான வரி விவகாரங்களில் சிக்கி அசிங்க்ப்படுவர்;அல்லது இவர்களோ இவர்கள் பிள்ளைகளோ
விபச்சார குற்றங்களில் சிக்கி தண்டிக்கப்படுவர்;இவை அன்றாட செய்தியாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

சில நண்பர்கள் கூறுவது போல இவர்களுக்கு எழுதி விளக்கம் கேட்பதோ விளக்கத்துக்காகக் காத்திருப்பதோ வேண்டாத வேலை; இது மோசடி என்பது என்னைப் போன்ற நுனிப்புல் மேயும் முட்டாளுக்கே தெளிவாகத் தெரிகிறதே;

இவர்கள் மனம் புண்படாதிருக்கவே மென்மையாகவும் அப்பாவியைப் போலவும் சந்தேகம் கேட்பது போன்ற பாவனையில் எழுதுகிறேன்; இதனால் எந்த ஒரு புது விசுவாசியும் நிச்சயமாக இடறலடையும் வாய்ப்பே இல்லை;சரியானதைக் குறித்து யோசிக்கும் வாசலையே நான் திறக்கிறேன்;

இதற்கு நீங்கள் ஆதாரம் கேட்பது அநியாயம்,ஏனெனில் இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள்; வெறும் ரெண்டு பேர் தான் பார்த்ததாக சாட்சி சொன்னாலே போதுமானது;

இப்படிப்பட்ட‌ மோசடியும் சத்தியத்துக்கு விரோதமானதுமான  துணிகரமான செயல்களை உண்மையான கிறித்தவர்கள் கண்டித்தாலே இவர்கள் நல்வழி திரும்ப வாய்ப்புண்டு; இன்னும் சொல்லுகிறேன்,இவர்களுடைய இரத்தப்பழியை ஆண்டவர் நம்மிடம் கேட்டால் என்ன செய்வோம்?

என்னைப் போன்ற சாதாரணமானவனுக்கு இந்த உணர்வை ஆண்டவர் கொடுக்க என்ன காரணம்,சிந்திப்போமா?

ஆண்டவர் இவர்களிடம் கிருபையாகக் கொடுத்துள்ள மந்தையினை சூழ்ச்சியினாலோ இழிவான ஆதாயத்துக்காகவோ மேய்க்காத வண்ணம் சபையார் அனைவரும் இணைந்து ஜெபிக்கவும் போராடவும் உணர்த்தவும் வேண்டும்;

சகோதரி ப்ரீத்தா அவர்கள் ஒரு நல்ல சுவிசேஷ பிரசங்கியாளர்; தற்போது அவரையும் இந்த படுபாவி கெடுத்துப் போட்டார்; அபிஷேகம் ஒருவரையும் புழுபோல விழுந்து நெளியச் செய்யாது, சகோதரி.

நீங்கள் சிங்கப்பூரில் பென்னிஹின் கூட்டத்தில் பார்த்த காட்சியைக் குறித்த பெருமை மிகுந்த தொலைக்காட்சி பேச்சில் நீங்களும் உங்கள் கணவரும் மாத்திரமே விழவில்லை என்றீர்கள்; பாஸ்டர்களெல்லாம் விழுந்து நெளிந்தது பரிசுத்தாவி இறங்கியதாலே என்றால் நீங்கள் விழாத காரணமென்ன, நீங்கள் பரிசுத்தாவியானவருக்கு இணையானவர்கள் (Super Power) என்பதாலா அல்லது பிசாசுகள் (devil) என்பதாலா?ஒரே குழப்பமாக இருக்கிறது.

கொஞ்சம் சரியாகவும் அதிகம் தவறாகவும் கலந்தடிக்கிறீர்கள்;  அவற்றை வகை பிரித்து உங்கள் சூழ்ச்சிகளை இனம் காணுமளவுக்கு எமது ஜனம் விவரமானதல்ல; தயவுசெய்து இயேசுவின் பெயரால் இவற்றையெல்லாம் செய்து அவருடைய தியாகத்தை அவமாக்க வேண்டாம்; சொல்லப்பட வேண்டிய தீர்க்கமான செய்தி சிலுவையைப் பற்றியதே என்பதை அறிவீர்களாக.

குற்றச்சாட்டு சுருக்கமாக
:

1. ஆவியில் விழுதல்

ஜெபிக்க வருவோரை கீழே தள்ளுவதும் அதைக் குறித்த தெளிவான போதனையை போதிக்காததும்; நெடுநாளாக பலர் கண்டித்தும் எருமை மாட்டு மேல் மழை பெய்தது போல என்னைக் கேட்க யாருண்டு என்று அந்த தவறைத் தொடருவது.

2. உள்ளங்கையில் விஷ்ணு சக்கரம்

இதில் இன்னும் ஒரு படிமேலேசென்று கணிணியின் தந்திரக்காட்சியின் (Comp.Graphics) உதவியுடன் உள்ளங்கையிலிருந்து விஷ்ணு சக்கரம் சுழன்று வருவதைப் போல சித்தரித்து பார்வையாளர்களை பிரமிக்கச் செய்வது; கொஞ்ச காலத்தில் உங்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் போட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; ஆனால் இதுபோன்ற துணிகரங்களை அன்பு சகோதரர் டிஜிஎஸ் அவர்கள் கூட முயற்சிக்கவில்லை.

கொள்ளைப் பொருளில் கடவுளுக்கு பங்கா..?


அண்மையில் தமிழ்கிறிஸ்டியன் தளத் தொடுப்பின் வழியாக விஜய் என்பவரின் வலைப்பூவை நுகர்ந்தேன்; அதன் வாசனை அத்தனை சுவாரசியமாக இல்லை; ஆனால் ஆராய்ச்சிக்குரியதாக இருந்தது;

விஷயம் இதுதான்,அது கிறித்தவர்களிடம் ஒரு ஊழியர் தசமபாகம் பெறுவது சம்பந்தமானது;அதனை கோர்ட் விசாரணை பாணியில் கற்பனையாக‌ எழுதியிருந்தார்; அதன் ஆங்கில மூலம் அவர்களிடம் இல்லையாம்; பிறகு நான் தேடி எடுத்தேன்;அதன் தொடுப்புகள் பின்வருமாறு:

இது தமிழ் மொழிபெயர்ப்பு:

http://vijay76.wordpress.com/2010/04/10/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5/

இது ஆங்கில மூலம்:

http://www.tithing.christian-things.com/jones.html

பின்வரும் காரியங்கள் அந்த சர்ச்சைக்குரிய கட்டுரையின் ஒரு பகுதி…

தசமபாகம் – ஒரு நீதிமன்ற வழக்கு

தமிழில் மொழிபெயர்த்தவர்: சகோ. விஜய்

எனக்கு சகோதரர் ஒருவர் மூலம் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட இந்த அற்புதமான நாடகத்தை உங்களுக்காக தமிழில் மொழியாக்கம் செய்து தருகிறேன். இதன் அசல் ஆங்கிலப் பிரதியை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. அவர் யாராக இருந்தாலும் அவருக்கு என் நன்றிகள், ஏனனில் இது அநேகருடைய கண்களைத் திறந்து வைக்கக் கூடியது. இந்த நாடகத்தில் வரும் நீதிபதி மற்றும் பாஸ்டர்.ஜோன்ஸ் ஆகிய இரண்டு பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல. இது யாரையும் புண்படுத்த வெளியிடப்படவில்லை, தேவஜனங்களின் மனங்களைப் பண்படுத்தும் நோக்கத்துடனேயே வெளியிடப்படுகிறது.

இடம்: நீதிமன்றம்

நேரம்: காலை 11.00 மணி

பாத்திரங்கள்: நீதிபதி மற்றும் பாஸ்டர் ஜோன்ஸ்

நீதிபதி: பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! நீங்கள் உங்கள் திருச்சபைக்கு வரும் மக்களிடம் கடந்த 20 ஆண்டுகளாக அவர்களது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை இறைவன் பெயரைச் சொல்லி ஏமாற்றிப் பெற்றதாகவும். தசமபாகம் தருபவர்களை இறைவன் ஆசீர்வதிப்பார் என்று நயங்காட்டியும் தராதவர்கள் மீது தேவனுடைய சாபம் வருமென்று மிரட்டியும் தசமபாகத்தைப் பெற்றதாக தங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குற்றத்தை நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்களா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: கனம் நீதிபதி அவர்களே! இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன், எமக்கு இறைவன் அருளின வேதம் எதைச் சொல்லுகிறதோ அதையே நான் என் மக்களுக்கு போதித்தேன். ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்க்கு தசமபாகம் கொடுத்தான் தேவன் அதினிமித்தம் அவனை ஆசீர்வதித்தார். அவன் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது.

நீதிபதி: அது சரி அல்ல! ஆதியாகமம் 13:2 இல் தான் ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது.

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! அதைத்தானே நானும் கூறுகிறேன்?

நீதிபதி: அந்த வசனம் ஆதியாகமம் 13 ஆம் அதிகாரத்தில் வருகிறது. ஆனால் ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் கொடுத்தது அதற்கு அடுத்த அதிகாரத்தில்தான் வருகிறது (ஆதி14:20) அப்படியானால் மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுப்பதற்க்கு முன்னமே ஆபிரகாம் ஐசுவரியவானாய் இருந்தான் என்பது தெளிவாக இருக்கிறதல்லவா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! நீங்கள் சொல்வதும் சரிதான்.

நீதிபதி: அப்படியானால் ஆபிரகாமின் பொருளாதார ஆசீர்வாதம் தசமபாகம் கொடுத்ததினால் வந்ததல்ல என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: (பதில் இல்லை)

நீதிபதி: பாஸ்டர் ஜோன்ஸ் அவர்களே! ஆபிரகாம் தசமபாகம் கொடுத்ததினால் தேவன் அவனை ஆசீர்வதித்தார் என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் ஆபிரகாம் எத்தனை முறை மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஒரே ஒரு முறைதான்.

நீதிபதி: அவன் மாதந்தோறும் கொடுத்ததாகப் பதிவு செய்யப்படவில்லை அல்லவா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை

நீதிபதி: சரி, ஆபிரகாம் தான் தசமபாகமாகச் செலுத்தியவற்றை எங்கிருந்து பெற்றான்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: அவை அவனுக்கு யுத்தத்தில் கொள்ளைப் பொருளாகக் கிடைத்தவை.

நீதிபதி: அப்படியானால் அவன் தனது சுய சம்பாத்தியமான வருமானத்திலிருந்து கொடுக்கவில்லை மாறாக தனக்கு சொந்தமல்லாத கொள்ளைப் பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தான் என்று சொல்லுகிறீர்களா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம் அப்படித்தான் வேதம் கூறுகிறது.

நீதிபதி: ஆபிரகாம் தனது சுய சம்பாத்தியத்திலிருந்து அல்லது சொந்தப் பொருளிலிருந்து மெல்கிசேதேகிற்கோ அல்லது வேறு யாருக்குமோ தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: அது…..வந்து…இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

நீதிபதி: வேதத்தை நன்கு கற்றறிந்து போதகராக இருக்கும் நீங்கள் “நினைக்கிறேன்” என்றெல்லாம் நீதிமன்றத்தில் பதிலளிக்கக் கூடாது. ஆபிரகாம் தனது சொந்தப் பொருளிலிருந்து எடுத்து தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் எங்கேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லையா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, நான் படித்தவரை எங்கும் அப்படிப் பதிவு செய்யப்பட வில்லை.

நீதிபதி: சரி..ஆபிரகாம் மெல்கிசேதேகிற்கு எவைகளையெல்லாம் தசமபாகமாகக் கொடுத்தான்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: கொள்ளைப் பொருளிலிலிருந்து கொடுத்ததாக வேதம் சொல்லுகிறது. அது கால்நடைகளாகவோ, உணவாகவோ அல்லது மக்கள் பயன்படுத்திய பிற பொருட்களாகவோ இருக்கலாம்.

நீதிபதி: பணத்தை தசமபாகமாகக் கொடுத்ததாக அங்கே குறிப்பிடப்பட்டுள்ளதா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை

நீதிபதி: சரி…ஆபிரகாம் விஷயத்தில் எனது கடைசிக் கேள்வி, மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுக்கச் சொல்லி தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டாரா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, ஆபிரகாம் அதைத் தானே விரும்பிப் பரிசாகக் கொடுத்தான்

நீதிபதி: நீங்கள் சொன்னவைகளை எல்லாம் வைத்துப் பார்த்தால், ஆபிரகாம் மெல்கிசேதேகிற்கு தானே விரும்பித்தான் பரிசாகக் கொடுத்தான், அதைக் கொடுக்கும்படி யாரும் அவனை நிர்பந்திக்கவில்லை, கொடுத்தது பணமும் அல்ல என்பது தெளிவாக விளங்குகிறது. அப்படியானால் எல்லாக் கிறிஸ்தவர்களும் தங்களது மாத வருமானத்தில் 10% பணத்தை திருச்சபைக்கு தர வேண்டும் என நிர்பந்திப்பது என்ன நியாயம்?

நீங்கள் உங்கள் சொந்த வாயால் ஒப்புக்கொண்ட காரியங்களை வைத்தே இதுவரை உங்கள் சொந்த லாபத்திற்காக வேதத்தை திரித்து உபதேசித்து மக்களைச் சுரண்டியிருக்கிறீர்கள் என்பது புலனாகிறது.

பாஸ்டர்.ஜோன்ஸ்: நீதிபதி அவர்களே! சற்றுப் பொறுங்கள், தசமபாகம் விஷயத்தில் ஆபிரகாமின் காரியத்தை மேற்கோள் காட்டிப் போதித்தது எவ்வளவு மதியீனம் என்பதை நான் இப்பொழுது உணர்கிறேன். ஆனால் தசமபாகம் குறித்ததான என்னுடைய நம்பிக்கைக்கு ஆதரவாக வேதத்தில் இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. யாக்கோபு தேவனுக்கு எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. நாம் அவருடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.

இந்த கட்டுரையினை வாசித்த நான் தசமபாகம் தருவது சரியா தவறா என்று ஆராய்வதைவிட அதில் கூறப்பட்ட ஒரு தவறான தகவலையே விவாதத்துக்கு எடுத்துக்கொண்டேன்;

பின்னூட்டமிட்ட அனைவரும் ஆஹா..ஓஹோ என அனத்தியதற்கு மாறாக எனது கருத்து இருந்ததோ என்னவோ அதன் பாதிப்பு விஜய் அவர்களின் பதிலில் தெரிந்தது;முதன்முறையாக அவருடைய தளத்துக்கு சென்று கருத்து கூறுகிறேன்;அதை வரவேற்று உபச்சார வார்த்தைகள் ஒன்றுமில்லாமலும் நட்பு பாராட்டாமலும் கருத்து கூறியிருக்கிறார்;அவருக்குரிய பதிலை நானும் கொடுத்துள்ளேன்;இன்னும் இந்த காழ்ப்புணர்ச்சியினால் உருவான கிறித்தவ எதிர்ப்பு கட்டுரைக்கு வரிக்குவரி பதிலளிக்கவும் ஆயத்தமாக இருக்கிறேன் என்பதையும் சொல்லிக்கொள்ளுகிறேன்;இந்த கட்டுரையின் அடிப்படையிலேயே என்னைக் குற்றவாளியாகவும் இவர்கள் நீதிபதியாகவும் இருக்கட்டும்;மற்றவை வாசகரின் ஆதரவைப் பொறுத்தது..!

இதோ எனது பின்னூட்டமும் விஜய் அவர்களின் கோபக்கணைகளும் அதற்கான எனது பதிலும்…

chillsam says:

விஜய் அவர்களே தாங்கள் மொழிபெயர்த்த ஆங்கில மூலத்தின் தொடுப்பைக் கொடுத்திருக்கலாமே…ஆபிரகாம் கொள்ளைப் பொருளை தசமபாகமாகக் கொடுத்ததாக நிரூபிக்கமுடியுமா..?

தவறான தகவலின் அடிப்படையிலான‌ சத்தியத்துக்கு விரோதமான ஒரு கட்டுரையிது..!

விஜய் says:

சகோ.சில்சாம் அவர்களே!

எனக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றது என்று கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தேன். மூலத்தை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. தாங்கள் கண்டுபிடித்தால் எனக்குச் சொல்லுங்கள்.

ஆபிரகாம் கொள்ளைப் பொருளை தசமபாகமாகக் கொடுத்ததாக நிரூபிக்கமுடியுமா..? என்று கேட்டிருந்தீர்கள்.

”இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.” (எபிரேயர் 7:4)”

வெறும் மொட்டையாக தவறான தகவலின் அடிப்படையிலான‌ சத்தியத்துக்கு விரோதமான ஒரு கட்டுரையிது என்று எழுதியிருக்கிறீர்கள். எது தவறான தகவல்? எது சத்தியத்துக்கு விரோதம் என்று தெளிவாக விளக்கினால் நலமாக இருக்கும்.

chillsam says: மட்டறுத்தலுக்காக உங்கள் மறுமொழி கிடப்பிலிருக்கிறது.

சகோ.விஜய் அவர்களே, உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ ஏற்கனவே மாற்று மார்க்கத்தவர் நம்முடைய ஆண்டவரை “காட்டுமிராண்டி கடவுள்” என்றும் “இனவெறி கடவுள்” என்றும் தூஷித்துக் கொண்டிருக்கின்றனர்; நான் அங்கே போராடிக் கொண்டிருக்கிறேன்;

இங்கே நீங்களோ ஆபிரகாம் கொள்ளைப்பொருளில் கடவுளுக்கு பங்கு கொடுத்தான் என்று எழுதியிருக்கிறீர்கள்;(மொழி பெயர்ப்பானாலும் அதன் கருத்துக்கு நீங்கள் தானே பொறுப்பு?) இதன்படி தசமபாகத்தைக் குறித்து நான் விவாதிப்பதைவிட அதன் உட்பொருளான “கொள்ளைப் பொருள்” எனும் வார்த்தையை எடுத்துக் கொள்ளுகிறேன்; மற்றவை என்னுடைய தனிக்கட்டுரைக்கு பயன்படட்டும்;

நான் சற்றும் எதிர்பார்க்காமல் நீங்கள் “கொள்ளைப் பொருள்” எனும் வார்த்தையை நிரூபித்தது மகிழ்ச்சி; நான் தோற்றுவிட்டது போல உணர்ந்தேன்; ஆனாலும் எனக்குள்ளிருந்து என்னை இயக்கும் ஆவியானவர் ஆபிரகாம் “கொள்ளைப் பொருளில்” பங்கைத் தரவில்லை எனப் போதித்ததால் இன்னும் ஆராய்ந்தேன்;

எபிரெயர்.7:4 -ல் தாங்கள் குறிப்பிட்ட “கொள்ளைப் பொருள்” என்ற வார்த்தையின் முலபாஷையின் அர்த்தத்தை ஆராய்ந்தபோது எனக்கு இன்னும் தெளிவு கிடைத்தது; அதன்படியும் ஆதியாகமம்.14 ம் அதிகாரத்தின் சூழமைவின்படியும் தேவனுடைய குணாதிசயத்தின்படியும் ஆபிரகாம் தேவனுக்காகப் படைத்தது கொள்ளைப் பொருளல்ல,அது அவனுக்கு சொந்தமாக இருந்து “எதிரிகளால் கொள்ளையிடப்பட்டவை” எனும் அர்த்தமே வரும்;இதற்கு ஆதாரம் 16ம் வசனம்; எதிரிகளிடம் கொள்ளையிடப்பட்டதில் தன் பங்கை மறுத்த ஆபிரகாமின் உத்தமத்தை தாங்கள் வசனம் 22,23 ல் வாசிக்கலாம்;

பழைய ஏற்பாட்டின் வாக்கியங்களுக்கு புதிய ஏற்பாட்டின் வாக்கியங்களில் ஆதாரம் தேடவேண்டிய அவசியம் தற்காலத்தில் இல்லை; அது முறையும‌ல்ல; எபிரெய மொழி வார்த்தை கிரேக்கத்தில் என்ன புரிதலில் வழங்கப்பட்டதோ நாம் அறியோம்;அதற்கு இணையதளத்திலேயே போதுமான வசதிகள் தற்போது வந்துவிட்டது;

திருச்சபைகளில் தற்போது இருக்கும் குழப்பங்களே போதும்; நீங்களும் உங்கள் பங்குக்கு எதையாவது செய்துவைக்கவேண்டாமென்று பணிவோடு கேட்டுக் கொள்ளுகிறேன்.

chillsam says: மட்டறுத்தலுக்காக உங்கள் மறுமொழி கிடப்பிலிருக்கிறது.

இந்த மூலத்துக்கும் விஜய் அவர்களின் மொழிபெயர்ப்புக்கும் ஏதேனும் வித்தியாசமிருந்தால் அதற்கு விஜய் அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளூவார்..!

” Rosh HaShanah “(happy newyear) greetings..!


“அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.”
(லூக்கா.1:29 Luke)


மரியாள் காபிரியேல் தூதன் சம்பந்தமான வேத வாக்கியம் இது; அதுபோல நண்பர்கள் இந்த (” Rosh HaShanah ” greetings..!) வாழ்த்துதலைக் குறித்து சிந்தித்து அவர்களாக ஒரு சில காரணங்களைக் கண்டுபிடித்து அதனைத் தங்கள் கருத்தாகப் பதித்துள்ளனர்; இதுவே கிறித்தவத்தின் மிகப் பெரிய பெலவீனம்;

Isa 44:18 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.

Hos 8:12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.

மேற்காணும் இரண்டு வாக்கியங்களும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்காகச் சொல்லப்பட்டது;ஆனாலும் இங்கே நான் சொல்லவரும் கருத்துக்கும் பொருத்தமாக இருப்பதால் அதனைப் பயன்படுத்துகிறேன்; எனது வாழ்த்துதலுக்கு நண்பர்களுடைய பின்னூட்டம் என்ன‌? அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை;எனக்கு பதில் வாழ்த்து சொல்லவுமில்லை;

ஆனால் நாம் பார்க்கதான் போகிறோம், இன்னும் இரண்டே மாதங்களில் கிறித்தவ உலகமே அல்லோலகல்லோலப்படுமளவுக்கு கொண்டாட்டங்களுக்கு நாம் ஆயத்தமாவோம்; சுனாமி வந்தாலென்ன, பூகம்பம் வந்தாலென்ன, வடதேசத்தில் சபைகளுக்கெதிராக உபத்திரங்கள் நடந்தாலென்ன, தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும் என கடன்வாங்கியாவது கொண்டாடித் தீர்ப்போம்;

ஆனால் வேதம் கொண்டாட உற்சாகப்படுத்தும் எந்த பண்டிகையும் இதுபோன்றதல்ல; கிறித்தவ உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் எந்தவொரு பண்டிகையும் வேதத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டு பரிசுத்தவான்கள் ஆசரித்ததல்ல‌; இதனை எனது வழக்கமான பாணியில் விவாதமாக்காமல்- இதற்கு மேலும் தாமதியாமல்- காலங்கடத்தாமல் போதனையாக எழுத விரும்புகிறேன்;கர்த்தர் தாமே உதவி செய்வாராக‌.

அதற்கு முன்பதாக ஒரு கிறித்தவ தளம் வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களையும் போதனைகளையும் அறிய விரும்பாமல் எப்படி புறக்கணித்து வருகிறது என்கிறதான எனது ஆதங்கத்தைப் பதிவுசெய்து விட்டு தொடருகிறேன்;

“ரோஷ் ஹஷானா ” எனும் வார்த்தையோ இன்னும் நான் எழுதப்போகும் வேத ஆதாரத்தின்படியான பண்டிகை சம்பந்த எபிரெய வார்த்தைகளோ தமிழ் வார்த்தைகளில் தேடுபொறியில் சிக்கவில்லை;அப்படியானால் இதைக் குறித்த ஞானத் தெளிவு நமக்கில்லையோ,அதைக் குறித்த போதனை நமக்கு அந்நியமானதோ என்று யோசித்தேன்;

ஆனால் அதைக் குறித்த வேதசத்தியம் போதிக்கப்படாமலே நம்முடைய சபைகளில் அறுப்பின் பண்டிகை,சேர்ப்பின் பண்டிகை, கூடாரப் பண்டிகை என களைகட்டி ஸ்டால்களில் கலெக்ஷன் தூள் பரத்துகிறது; இதனைத் தானே நமதாண்டவரும் கண்டித்தார்?

“Isa 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.”

என்னுடைய வாழ்த்துக்கு சகோதரர்  அற்புதம் அவர்களின் பின்னூட்டமிது:
//”  Rosh HaShanah ” greetings..! என்றால் என்ன என்று தேடிப் பார்த்ததில் யூத வருடப் பிறப்பு வாழ்த்துக்கள் என்ற பதிலைப் பெற்றேன். உலகமெங்கிலும் சிதறி கூடி வாழும் யூதர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். சிறைபிடிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எவ்வாறு ஒன்று சேர்ந்து தங்களுக்கான தேசத்தைப் பெற்றார்களோ அதேப் போல உலக தமிழர்கள் ஒன்று கூடி தங்களுக்கான தமிழ் தேசத்தைப் பெற யூத வருடப் பிறப்பு நினைவூட்டுகிறது. ஏனெனில் அவ்வாறு யூதர்கள் ஒன்று கூடியபோது கொண்டாடப்பட்ட பண்டிகைதான் இன்றளவும் வருடப் பிறப்பாக அவர்களால் ஆசரிக்கப்படுகிறது.
சிந்தனைக்கு:
யூத வருடப்பிறப்பு வாழ்த்துகள் கூற தயாராக இருக்கும் நாம் நம் இந்திய துணைக்கண்டத்தில் வாழும் மொழிவாரி மக்களில் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறோமா? //

இதுதான் இந்திய- தமிழ் கிறித்தவத்தின் நிலைமைக்கு நல்லதொரு உதாரணம்; இந்த வாழ்த்தை அவர்கள் வேதத்தின் வாழ்த்தாகப் பார்க்காமல் யூதர்கள் சம்பந்தமான ஏதோ காரியமாகப் பார்த்து வேறு சில புறசாதியினங்களின் பண்டிகைகளுக்கும் நாம் வாழ்த்து கூறுகிறோமா என்று ஆராய்கிறார்கள்; புறசாதியினரின் பண்டிகைக்கும் வேதத்தின் பண்டிகைக்கும் வித்தியாசமுண்டல்லவா?

யூத வருடப்பிறப்பு என்பது யூதர்களுக்கு மட்டுமானதல்ல,அது முழு உலகத்துக்குமானது, அது சிருஷ்டிப்பு சம்பந்தமானது; சிருஷ்டிகர் சம்பந்தமானது,ஜீவன் சம்பந்தமானது,அர்ப்பணம் சம்பந்தமானது,எதிர்வரும் வருடத்தின் ஆசீர்வாதம் சம்பந்தமானது,முழு வேதத்தின் மீதான நமது உரிமை சம்பந்தமானது; இன்னும் என்ன சொல்ல‌..!

நாம் பெற்றிருக்கும் குறைந்த வேதஅறிவின்படி அது சிதறடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் ஒன்றிணைந்த நாள் (??) போல பாவிக்கப்படுகிறது; ஆனால் காலங்களின் வழியே சென்று வேதத்தை அறிந்துணர -சர்வவல்லவர் மனுக்குலத்துக்காக செய்து முடித்த மாபெரும் இரட்சிப்பின் திட்டத்தை புரிந்துணர உதவுவதே இந்த பண்டிகைதான் என்பது வேதம் போதிக்கும் ஒரு முக்கிய சத்தியமாகும்;

யூதர்களுடைய பாரம்பரியத்தில் இரண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதுண்டு;அதன் தொடர்பாக ஏழு பண்டிகைகள் ஆசரிக்கப்பட்டன‌; அதிலொன்று இஸ்ரவேலர் (யூதர் என்று கூறாமல் இஸ்ரவேலர் என்றே குறிப்பிடுவோமாக.) எகிப்திலிருந்து வெளிப்பட்டது தொடர்பான நினைவுகூறுதலாகக் கட்டளையிடப்பட்டு தலைமுறை தலைமுறையாக ஆசரிக்கப்படும் பஸ்கா பண்டிகை;இதுவே பிரதானமானது; இதனை நம்முடைய ஆண்டவரும் அவர்தாமே பரமேறிச் சென்றபிறகும் பவுலடிகள் உள்ளிட்டோரும் ஆசரித்ததுண்டு;அதன் பொருள்பட ஆசரிக்க போதித்ததுமுண்டு;

அடுத்து அதற்கு இணையான மற்றொரு கொண்டாட்ட காலம் தான் ரோஷ் ஹஷானா எனும் புதிய ஆரம்பம்;பஸ்கா பண்டிகையானது மதரீதியிலான வருட ஆரம்பமானால் இது வெளிப்புற வாழ்க்கை அல்லது அரசியல்ரீதியிலான வருட ஆரம்பமாகும்; முந்தியது இஸ்ரவேலருக்கு மட்டுமானது என்றால் பிந்திய வருட ஆரம்பமானது உலகமனைத்துக்கும் பொதுவானதாகும்; ஏனெனில் தேவாதி தேவன் இந்த உலகை நிர்மாணித்த நாளாக அதனை இஸ்ரவேலர் ஆசரிக்கிறார்கள்;அது மூடநம்பிக்கை என்போமா? அது மூடநம்பிக்கையாகவோ அந்நியமாகவோ ஆகுமானால் வேதம் பொய்யாகும், நாமும் வேதத்துக்கு அந்நியமாவோம்;

இது எனது மற்றொரு நண்பரான ஜோ அவர்களின் பின்னூட்டம்:
// உலகளாவிய யூதர்கள் தங்களது தேசத்தை 1948’ல் பெற்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தங்களது உரிமைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை யூத வரலாறு அளித்தது. அதேபோல இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கமும் அஹிம்சை என்ற காந்தீய கொள்கையிடம் மண்டியிட நேர்ந்தது. அமெரிக்க கறுப்பின மக்கள் தங்களது உரிமைகளை பெற்றனர். இப்படி உலகமெங்கும் ஒடுக்கப்பட்டோருக்கு நியாயம் செய்த தேவன், ஈழ தமிழர்களுக்கும் நியாயம் கிடைக்க செய்வார். 2000 ஆண்டுகள் காத்திருந்த யூதர் 400 ஆண்டுகள் காத்திருந்த இந்தியர்….. ம் பார்ப்போம், நம் சகோதரர்களுக்கும் நிச்சயம் நீதியின் சூரியன் உதிக்கும்.

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்பது சொல் வழக்கு ஆனால் இன்றைய தமிழர் பிரிவினைகளாலும், ஒற்றுமையின்மையினாலும் தங்களது குரலை ஓங்கி ஒலிக்க செய்யமுடியாமல் தலை குனிந்து நிற்கும் நிலை. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே தமிழர்கள் பிளவுபட்டு கிடந்தனர்…. இனிமேல்?

உலகமெங்குமுள்ள ஆபிரகாமின் ரத்தவழி சந்ததிகளுக்கு

ஆபிரகாமின் விசுவாச சந்ததிகளான

எங்களின் ரோஷ் ஹசானா வாழ்த்துக்கள்….//

இந்த சொல்லை உச்சரிப்பதிலேயே அதன் அழகும் கம்பீரமும் மிளிரும்; இதனால் வேதத்தில் ஒரு யுத்தமே நடந்தது;இஸ்லாமியர் அதாவது பாலைவனத்தில் உமிழ்நீர் வற்றிப்போனவன் “ஷ” எனும் சொல்லை உச்சரிக்க இயலாது; இதுவே யூதருக்கும் அரபியருக்கும் வித்தியாசம்; எனவே மிக எச்சரிக்கையாக அதனைச் சரியாகப் பதிக்க முயற்சிக்கிறேன்;ஆனால் நண்பர் “ஜோ” மிகச் சாதாரணமாக ரோஷ் ஹசானா என்று குறிப்பிட்டிருக்கிறார்; இதெல்லாம் பெரிய பாவமில்லை; ஆனால் சிறிய பயிற்சி அவ்வளவே;

இவரும் கூட சற்றும் பதட்டமில்லாமல் மேலோட்டமாகவே கருத்தினைப் பதிவிடுகிறார்; இந்த நவீன காலத்திலும் வேதத்தின் ஆழ்ந்த சத்தியங்களை ஆராய்ந்தறிய மனமில்லாவிட்டால் அதற்காக வைராக்கியம் கொள்ளாவிட்டால் எப்போது அதற்கு சமயமுண்டாகுமோ?

இந்த சத்தியங்கள் எனக்குத் தெரியவந்தபோது என்னிடம் எந்த வசதியும் இல்லை; அதாவது கம்ப்யூட்டரோ (computer) இணையதள (internet) வசதியோ நல்ல காமெண்டரிகளோ (commentaries) யூதக் கலாச்சாரம் சம்பந்தமான புத்தகங்களோ (jewish history) எதுவுமில்லை;

ஒன்று மட்டும் இருந்தது, வரலாற்றுப்பூர்வமாக வேதத்தையறியும் ஆர்வமிருந்தது; அதன் அடிப்படையிலேயே எனது தனிப்பட்ட முயற்சியில்லாமலே பல விஷயங்கள் எனக்குத் தெரியவந்தது;

நம்முடைய தமிழ்ப் போதகர்கள் பலருக்கும் இந்த விஷயங்கள் தெரியாமல் இல்லை;ஆனாலும் வீணான குழப்பங்கள் வேண்டாமென பல காரியங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன‌; எல்லாவற்றுக்கும் ஒரு சில வசனங்களைத் தயாராக வைத்திருப்பார்கள்; அவற்றில் சில‌,

“நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.”(ரோமர்.Rom 14:6 )

“ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.”(கொலொசேயர்.Col 2:16)

ஒரு நண்பர் இந்த வசனம் இருதரப்புக்கும் பொதுவானது என்கிறார்;அதாவது பண்டிகையைக் குறித்த போதனையின் மூலம் பக்திவிருத்தி உண்டாகுமானால் அதனைத் தடுக்கக் கூடாது; அதேபோல அதனைக் குறித்த அறிவில்லாமல் ஒருவன் மந்தமாக இருந்தால் குற்றப்படுத்தவுங்கூடாது;
“விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.” (ரோமர். Rom 14:1)

மேலும் மறுபுறத்தில் மற்றொரு அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது; வேதத்துக்கு முற்றிலும் விரோதமாக – வேதம் நேரடியாகக் கட்டளையிடாத கத்தோலிக்க மார்க்க வழிவந்த பண்டிகைகளைச் சீர்திருத்த சபையார் எனக் கூறிக்கொள்வோரும் அவர்கள் அடியொற்றி ஆவிக்குரிய சபையார் எனக் கூறிக் கொள்வோரும் ஆசரித்துக் கொண்டிருக்கின்றனர்;

வேதத்துடன் நேரடியாக சம்பந்தபட்ட பண்டிகைகளைத் தவிர்த்துவிட்டு பழங்குடியினர் பாரம்பரியமாகக் கொண்டாடி வந்த‌ பண்டிகைகளை நாம் கொண்டாடுவதால் பாபிலோனிய சூழ்ச்சி மார்க்கத்த்துக்கு
கிறித்தவம் விலைபோய்க் கொண்டிருக்கிறது;

வருடமுழுவதும் ஆண்டவருடைய பிறப்பையும் இறப்பையும் உயிர்த்தெழுதலையும் விமர்சிக்கும் உலகத்தார் அனைவரும் குடித்து கூத்தடிக்க பயன்படுத்தும் அந்த  விழாக்காலங்கள் அநேகர் விழுந்து போவதற்கே ஏதுவானது;

ஆனால் வேதத்தின் ஏழுபண்டிகைகளும் புரிந்து ஆசரிக்கப்படுமானால் நாம் முழு வேதத்தினையும் மிக எளிதாக நம் முடைய அடுத்த சந்ததிக்கும் கடத்திச் செல்ல‌முடியும்; இந்த ஏழுபண்டிகைகளும் ஆண்டவருக்குள் நிறைவேறும் அதிசயத்தையும் மிக எளிதாக நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு போதிக்கமுடியும்;

இங்கே நண்பர்கள் சிலாகிக்கும்வண்ணமாக யூதர் சுமார் 2500 வருடத்துக்குப் பிறகும் தங்கள் சுதந்தர தேசத்தையடைந்தார்கள் என்றால் அதற்குக் காரணமாக அமைந்தது,அவர்கள் தங்கள் கலாச்சார அடையாளமான பண்டிகைகளை தேவபயத்துடன் ஆசரித்ததுதான்;அவர்கள் இதில் தவறியபோதெல்லாம் எதிரிகளிடம் வீழ்ந்துபோயினர்;

வேதத்தில் காலங்கள் சம்பந்தமாக சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்களையும் இந்த அறிவின்மூலமே எளிதாக அடையமுடியும்; இதன்மூலமே விஞ்ஞானத்தையும்  எதிர்கொள்ளமுடியும்;உதாரணமாக,

“வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.”(சங்கீதம்.65:11 Psa )

-எனும் வாக்கியமானது எந்த பொருளில் -எந்த வருட ஆசரிப்பு முறைக்காகச் சொல்லப்பட்டதோ அதற்கு மட்டுமே பொருந்தும்; இதனைக் குறித்தும் இன்னும் விவரமாக எழுதுவேன்; ஒவ்வொரு பண்டிகையையும் அதன் முக்கியத்துவத்தையும் நிதானமாக எழுத முயற்சிக்கிறேன்; வாசகர் எனக்காக ஜெபிக்கவும்; மாற்றுக்கருத்து இருப்பின் தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.

“ரோஷஹ்ஷானா” –” Rosh HaShanah ” greetings…God Bless You..!

இரண்டில் ஒன்று…தீர்மானம் நன்று..!


நேற்று ஒரு நண்பர் தன்னுடன் ஒரு சகோதரரை அழைத்துக் கொண்டுவந்து அவருக்கு ஆலோசனை சொல்லி பிரார்த்திக்க வேண்டினார்; அவருடன் பேசியபோது எனது சிந்தையில் உதித்த சில கருத்துக்கள்:

ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்து -ஆனாலும் வேர்கொள்ளமுடியாமல் – நிரந்தர வேலையுமில்லாமல் – 2007- ம் வருடம் திருமணமாகி – ஆறுமாத ஆண் குழந்தையுடன் மனைவியை விட்டுப் பிரிந்த நிலையில்  -சில வாரங்கட்கு முன்பு சாலை விபத்தில் கையொடிந்து  -தங்க இடமில்லாமல் பரிதாப நிலையிலிருந்தவரிடம் நான் இப்படியாகப் பேசிக் கொண்டிருக்கிறேன்;

அவர்கள் இருவருக்கும் வந்ததும் உபசரிப்பாக ஆளுக்கொரு க்ளாஸ் தண்ணீர் கொடுத்தோம்;அதை ஒருவர் முழுவதும் குடித்துவிட மற்றவர் பாதியளவு மீதம் வைத்திருந்தார்; அதையே உதாரணமாக்கி நான் கேட்டேன்,இந்த இரண்டு க்ளாஸ்களில் எது சிறந்தது?

காலியாக இருக்கும் க்ளாஸா அல்லது ஏதோ கொஞ்சம் இருக்கும் க்ளாஸா?
எப்படியோ மிகச் சரியாகவே சொன்னார்,காலியாக இருக்கும் க்ளாஸ் தான் என்று;எப்படி என்று நான் விளக்கினேன்;

பாதியளவு தண்ணீர் இருக்கும் க்ளாஸில் இன்னும் கொஞ்சம் நிரப்பி பயன்படுத்தவும் முடியாது,இருக்கும் கொஞ்சம் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாமென்றாலும் முடியாது;ஏனெனில் அது இன்னொருவர் குடித்துவிட்டு வைத்ததும் மாசடைந்ததுமான தண்ணீராக இருக்கும்;எனவே என்ன செய்வோம்,அதை கொட்டிக் கவிழ்த்து  கழுவி விட்டு புதியதான தண்ணீரை நிரப்பி பரிமாறுவோம்;இப்படியே இதுவரை வாழ்ந்த உங்கள் வாழ்க்கை பயனற்றதாகவும் இனி செய்வோம் என்ற திகைப்புடனுமிருக்கும்;

ஆனால் ஒன்று செய்யலாம்,புதிய வாய்ப்புக்காக ஆவலுடன் ஆண்டவரை நம்பி காத்திருங்கள்;ஆண்டவர் புதியதொரு வாசலைத் திறப்பார்;அதுவரை உங்களுக்காக நீங்கள் உங்கள் பழைய அனுபவத்திலிருந்து திட்டமிடுவதை நிறுத்துங்கள்; நீங்கள் முழுவதும் குணமாகி சகஜநிலை திரும்பும் இந்த இடைபட்ட ஓய்வு காலத்தில்உங்களைப் பற்றிய நன்மதிப்புகளை வளர்ந்துக்கொள்ளுங்கள்; நல்ல நண்பர்களுடன் ஐக்கியம் கொள்ளுங்கள்; நல்ல ஆவிக்குரிய புத்தகங்களைப் படியுங்கள்;உங்கள் மீது நம்பிக்கை வளரும்படியான காரியங்களை யோசித்து அதை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் காரெக்டரை டெவலப் செய்யுங்கள்; உங்களுக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து நீங்கள் மீண்டு உயிருடனிருப்பதே ஆண்டவர் உங்களை நேசிக்கிறார் என்பதற்கு அடையாளமாகும்;

மனிதர் சற்று நம்பிக்கையுடனும் தெளிவுடனும் விடைபெற்றார்;என்ன என்னுடைய வழக்கமான போட்டோ எடுக்க மறந்துவிட்டேன்;விரைவில் அவரது போட்டோவை இங்கே பதிக்கிறேன்.

ஆகஸ்டு 10 கறுப்புதினம்..!


ஆகஸ்ட் 10 ஆகிய இதே நாளில் சரியாக அறுபது வருடத்துக்கு முன்பு அதாவது 1950 -ல் தலித் கிறித்தவர்களுக்கு மட்டும் உள்நோக்கத்தோடு தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்பட்டது;

அதற்கு இன்று வரையிலும் எந்த நியாயமான காரணத்தையும் யாரும் சொல்லி விடவில்லை; ஆனாலும் சமுதாய விடுதலைக்காக மதம் மாறும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டேயிருக்கிறது;

இதனைப் பொறுக்காத அடிப்படைவாதிகள் அவர்களை இன்னும் தரம் தாழ்த்தும் வண்ணமாக பணத்துக்கு மதம் மாறுவதாக வசைபாடுகிறார்கள்;

உண்மையிலேயே இந்தியா மதசார்பற்ற நாடாக இருந்தால் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளை மதசார்பில்லாமல் வழங்க என்ன தடை?

புத்த மதமும் சீக்கிய மதமும் விதிவிலக்காக சலுகை பெறும்போது கிறித்தவருக்கு மட்டும் அது ஏன் பொருந்தாது?

இந்நிலையில் இந்திய கிறித்தவர்களை சிரம் தாழ்ந்தும் பதம் பணிந்தும் வேண்டுவது யாதெனில் தாங்கள் சிறிது தியாகம் செய்து தங்கள் மார்க்க விடுதலையைப் பறைசாற்றுங்கள்;

அது எப்படி..?
அண்மையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததல்லவா, அதில் தங்கள் சாதியை எவ்வாறு குறிப்பிட்டீர்களோ அவ்வாறே தங்கள் மதத்தையும் குறிப்பிட்டு – தெளிவாக – நேரடியாக ‘நான் கிறித்தவ ஆதிதிராவிடன்’ என்று பதிக்கவேண்டும்;

இதனால் என்ன பலன் என்று கேட்கலாம், அதன் பிறகே நம்முடைய உண்மையான பெலத்தை அரசாங்கம் உணர்ந்து கொள்ளும்; நாமும் நம்முடைய சலுகைகளை உரக்கச் சொல்லிக் கேட்கலாம்;

அம்பேத்கர் சொன்னாராம், என்னை விட என் நாடு முக்கியம்,என் நாட்டை விட என் இலட்சியம் முக்கியம்,என் இலட்சியத்தைவிட எனது சமுதாயத்தின் விடுதலை முக்கியம்’ என்று!

ஆம், குறுகிய மத உணர்வுகளில் நாம் சிக்கிவிடாமல் இதுபோன்ற சமுதாயப் பிரச்சினைகளிலிருந்து அந்நியப் படாமல் ஏக சிந்தையுடன் இணைந்து போராடுவோம்;

வெற்றி நமதே..!

http://in.christiantoday.com/articles/dalit-christians-declare-black-day-on-aug-10/5548.htm