Archive | December 22, 2009

சுதா என்றொரு பெண்


இன்று காலையில் சுதாவின் போன்..!
கடந்த ஒரு வருடமாகக் காத்திருக்கும் அவளுக்கு இன்னும் மாப்பிள்ளை அமையவில்லை;

இதனால் சோர்ந்துபோன வீட்டார் “நீ சாமி தோஷத்திலிருக்கிறாய், மேல்மருத்தூருக்கு மாலை போட்டு, வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் வந்தால் தான் நல்லது நடக்கும்” என்று சொல்லிவிட்டார்கள்;

“நான் என்ன செய்யட்டும்;அவர்கள் சொல்வதுபோல எங்கள் ஊரில் சிலருக்கு நல்லது நடந்துள்ளதால் எனக்கு இரண்டு மனமாகவே இருக்கிறது” என்றாள்;

நான் என்ன சொல்வேன்,கடந்த ஐந்து வருடமாக முழு விசுவாசியாகவும் சிறு வயது முதலாக ஆண்டவரது அபிமானியாகவும் இருக்கும் சுதா, “அந்த விக்கிரக பேய் வணக்கம் எனக்கு ஒரு பொருட்டல்லவே; எனது வீட்டாருக்காக இதைச் செய்தால் என்ன? இல்லாவிட்டால் வீட்டில் பெரிய பிரச்சினையாகும்” என்கிறாள்;

நானோ,”இது தான் உனது விசுவாசத்துக்கான சோதனை; இதுபோன்ற சூழ்நிலையில் தான் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர்; ஆனாலும் உனது சூழ்நிலையில் என்ன செய்வாயோ தெரியவில்லை; உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்; நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று போனை வைத்துவிட்டேன்;

சிறிது நேரத்தில் மீண்டும் போன் செய்த சுதா சொன்னது,”நான் இந்த மாதம் ‘ஒரு தனி காரணம்’ சொல்லி சமாளித்துவிட்டேன்; அடுத்த மாதத்துக்குள் எதாவது அதிசயம் நடக்க பிரார்த்தனை செய்யுங்கள்”.

செய்தி:-


செய்தி: மும்பையில் கோவில் வளாகத்தில் தங்கியிருந்த அப்பாவி சந்நியாசிகள் மீது ராஜ் தாக்கரேவின் நவ் நிர்மாண் கட்சியினர் தாக்குதல்..!

கிறிஸ்மஸ் பலகாரம்


கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் பலகாரம் செய்து அன்புக்குரியவருக்குக் கொடுப்பது நமது கலாச்சார வழக்கமாக இருந்தது;ஆனால் தற்கால “பரபர”வாழ்வில் அதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை;மிக எளிமையாக கடையில் வாங்கி விநியோகிக்கிறோம்;

ஆனால் இதில் மற்றொரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும்; யாரோ செய்ததை நம்முடைய பணத்தில் வாங்கிக் கொடுக்கிறோம்; நாமே அன்புடன் தயாரித்துக் கொடுக்கும் போது கிடைக்கும் திருப்தியுணர்வும் சந்தோஷமும்
இதில் கிடைக்குமா என யோசிக்கவேண்டும்;

மேலும் ஒரு தலைமுறையே இதுபோன்ற பண்ட பலகாரம் செய்யும் கலையினைக் கற்றுக்கொள்ளாமலே கடந்துவிட்டது; இதுவும் கலாச்சாரரீதியான ஒரு ஆபத்தாகும்;

மேலும் கடையில் வாங்கும் போது அதைச் செய்யும் கூலியாளின் சலிப்புடன் கூடிய வேதனைகளை சற்று யோசித்துப்
பார்க்கவேண்டும்; அவன், ‘எப்போது வேலை முடியுமோ சம்பளம் போதவில்லையே,வேறு அதிக சம்பளம் கிடைக்கும் வேலையைப் பார்க்கவேண்டும்’ என்ற கலவையான உணர்வுடனே அனைத்தும் செய்வான்;

ஏனெனில் முதல் போட்ட முதலாளி பணத்தை மட்டும் எண்ணிக் கொண்டு கல்லாவில் உட்கார்ந்திருப்பார்; தொழிலாளியோ அடுப்படியில் உஷ்ணத்தில் தவிப்பான்;

நமது இளைய தலைமுறையினரின் நலன் கருதி ஒன்றிரண்டு பலகாரங்களையாவது அவர்களை அருகில் வைத்துக் கொண்டு அன்புடன் நாமே செய்து நமது சொந்தங்களுக்கு மெய்யான ஒரு சந்தோஷத்துடனும் திருப்தியுணர்வுடனும் விநியோகிக்கலாமே..!

உதவும் கரங்கள்


கோவையில் ராம் நகரில் முடிதிருத்தும் கடை வைத்துள்ள் சுப்ரமணி அவர்களின் அனுபவம்;

ஒவ்வொரு மாத‌மும் வார விடுமறை தினமான செவ்வாய்க்கிழமையன்று தவறாமல் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழக்கமுடைய பக்தர் சுப்ரமணி ஒரு நாள் யோசித்தார், சாமியைத் தேடிச் செல்லும் நேரம் சமூகத்துக்குப் பிரயோஜ‌னமான எதையாவது செய்யலாமே என்று!

அருகிலிருந்த “உத‌வும் கரங்கள்” ஆதரவற்றோர் இல்லத்தில் இலவசமாக முடிதிருத்த துவங்கினார்; அதில் கிடைத்த ஆத்ம திருப்தியின் காரணமாக தற்போது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இதனைச் செய்கிறார்;

மேலும் தனது கடைக்கு வரும் ஆதரவற்றோருக்கும் தனது சேவைப் பணியினை விரிவு செய்துள்ளாராம்.

“மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பது எத்தனை உண்மையல்லவா..!

நம்பிக்கையற்ற கல்லறைத் தேடி …


அண்மையில் நடந்த‌ பள்ளி வேன் விபத்து அனைவரும் அறிந்ததே; அதைக் குறித்ததான ஒரு தகவலை ஜூனியர் விகடனில் வாசித்தேன்;

வேன் டிரைவர் செல்போன் பேசிக் கொண்டே வேனை ஓட்டியதாலேயே வேன் நிலை தடுமாறி ஏரியில் விழுந்து மூழ்கியது என்றும் சுக்கான் அச்சு முறிந்ததே விபத்துக்குக் காரணம் என்றும் இருவேறு காரணங்கள் சொல்லப்படுகிறது;

அதில் ஒன்பது குழந்தைகளும் ஒரு ஆசிரியையும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர் என்பதையும் அறிந்தோம்;

ஆனால் அந்த டீச்சர் வேன் முழுவதும் மூழ்குவதற்குள் நான்கு குழந்தைகளைக் காப்பாற்றினாராம்; எல்லாவற்றுக்கும் மேலான சோகம் என்னவென்றால் மரித்த அவருடைய சடலத்தின் கையிலும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் இருந்ததாம்..!

ஒரு வருடத்தையே கதையைப் போல கழித்துப் போட்ட நமக்கு இது ஒரு பாடமல்லவா?

ஆண்டவருடைய அன்பை நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்துக்குக் கடத்தும் கட்டளை பெற்ற நம்முடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததா என்று இந்த வருடத்தின் இறுதியில் யோசித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம்;

இயேசுவைத் தவிர அடுத்த (Chance or choice) சான்(ய்)ஸ் இந்த உலகுக்கு இல்லை என போதிக்கப்பட்ட நாம் அவரையறியாத மக்களின் முடிவு எப்படியிருக்கும் என்ற பயங்கரத்தை உணர்ந்தோமா? அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்?

அந்த டீச்சர் நினைத்திருந்தால் தான் மட்டும் தப்பியிருக்க முடியுமே! அந்த வேன் டிரைவரே ஓடி விட்ட நிலையில் அந்த சூழ்நிலையின் கொடுரத்தை தனியொருத்தியாக எதிர்கொண்ட அந்த டீச்சரின் மனத் திண்மையே தீமைக்கு எதிராகப் போராடும் நமக்கும் இன்று வேண்டும்;

அந்த புண்ணிய ஆத்மா மோட்சத்துக்குப் போகுமா, நரகத்துக்குப் போகுமா என்று ஆராயும் மதத் தலைவர்கள் அந்த இளம் பெண்ணின் தியாகத்தைத் தங்கள் வாழ்வின் இலட்சியமாகக் கொள்வார்களா?

நம்பிக்கையற்ற கல்லறைத் தேடி நாடோறும் செல்லும் இலட்சங்களுக்காகக் கவலைப்படுவதும் மீட்பதும் நமது கடமையாகும்;

மரணம் ஒரு நாள் சந்திக்கும் வேளையில் நம்முடன் யாரும் வரப்போவதில்லை; இக்கரையிலிருந்து அக்கரை சேரும்போது நாம் சந்திக்கப் போவது யாரென்பதையறிந்தால் நலமாகும்.

பிரார்த்தனை..!


Don't worry be Happy..!

என்னிடம் இல்லாமலிருந்து இன்று இருப்பவற்றை எண்ணி இல்லாததற்காக இறைஞ்சுவதைத் தவிர்த்தேன்;ஏனெனில் என்னிடம் அன்று இல்லாமலிருந்தது இன்று இருப்பது மெய்யானால் இன்று இல்லாதிருப்பதும் அன்று இருக்கும் என்பது மெய்தானே..?

கிறிஸ்மஸ் சர்ச்சைகள் ஏன்..?


// “அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே இடமில்லாதைருந்த படியினால், பிள்ளையைத் துணிகளிலே சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்” லூக்2:7

“அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு….” மத்2:11

“மாட்டுத்தொழுவம்” என்ற வார்த்தையே இங்கில்லாத போது இயேசு கிறிஸ்து மாட்டுத்தொழுவத்தில்தான் பிறந்தார் என்று நம்பிக்கொண்டிருக்கிறது கிறிஸ்தவம்;

மேலும் “கந்தைத்துணியோ கர்த்தருக்கு” என்று பாடல் வேறு; ஒரு யூதஸ்த்ரீ தனது முதல் பிரசவத்துக்கு எப்படி முன்னேற்பாடாக இருந்திருப்பாள் என்று யாருமே யோசிப்பதில்லை; கந்தைத்துணி என்ற வார்த்தையே இல்லை.

சாஸ்திரிகள் வந்து பார்த்தது வீட்டில், நட்சத்திரம் வழிகாட்டியது வீட்டுக்கு….

யோசிக்கலாமே? //

இது ஒரு அறிவடைய விரும்பும் ஒருவரின் ஐயம்..!

My Lord...my GOD..!

“அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்”
(லூக்கா.2:7,11,12)

இது தூதனால் மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்டதான நற்செய்தி; இதனைத் தேர்ந்த கல்வியாளரும் கிரேக்கருமான லூக்கா பதிவு செய்துள்ளார்;

“முன்னணையிலே” எனும் வார்த்தையைத் தான் மாட்டுத்தொழுவம் என்கிறோம்;ஆங்கிலத்தில் “manger” எனப்படும் இதன் அர்த்தம் தீவனத்தொட்டி எனக் கொள்ளலாம்;

இது சம்பந்தமாக இரண்டு வித புரிதல் உண்டு;ஒன்று,கால்நடை இளைப்பாறுமிடம்;இரண்டு தீவனத் தொட்டி;

யூகமாக இவற்றைக் குறிப்பிடக் காரணம் காலமும் கலாச்சாரமும் மொழி சம்பந்தமான தடைகளுமே;

ஆனாலும் சூழ்நிலை நமக்கு ஓரளவு தெரியவருவதினால் சில‌
உண்மைகளை எளிதாக அறியமுடிகிறது;

சத்திரத்தில் இடமில்லாததால் சத்திரத்துக்கு வந்தவருடைய அந்த கால வாகனமான கால்நடைகள் கட்டிவைக்குமிடத்திலிருந்த சிறு இடத்தில் அவசரமாக ஒதுங்கினர்,கர்ப்பிணியான மரியாளும் அவருடன் வந்த யோசேப்பும்;

பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லை;
பிரசவம் என்பது திட்டமிட முடியாத ஒன்று;
அதாவது நான் “சிசேரியன்” பிரசவ முறை நடைமுறையில்லாத காலத்தைச் சொல்கிறேன்;

மரியாள் யூத பெண்மணியாக இருப்பினும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவளல்ல; மேலும் குடிமதிப்பு எழுத வேறொரு புதிய இடத்துக்கு வந்துள்ளனர்; நண்பர்கள் அறிமுகமானவர்கள் யாரும் அருகிலில்லை; பிரசவ வலி வந்தவுடனே தன்னிடமிருந்த சில துணிகளிலேயே சிலதை கிழித்து பயன்படுத்தியிருக்க வேண்டும்;

இவையெல்லாம் அந்த சூழலை தியானிப்பதால் வரும் யூகமான செய்தியே; நாங்களெல்லாம் எங்கள் தாயாரின் பழைய புடவைத் துணிகளிலேயே வளர்ந்தவர்கள் என்ற உணர்வோடு சொல்லுகிறேன்;

காப்பிணியான ஏழைத் தாய் தான் அதிகம் துவைத்து பயன்படுத்திய தனது பழைய “வாயல்” புடவை துணிகளையே சுத்தமாகத் துவைத்து சேமித்து வைத்துக் கொள்ளுவாள்;பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு அந்த துணிகளே படுக்கை விரிப்பாகவும் இடுப்பில் கட்டும் கந்தைத் துணியாகவும் மாறும்;ஏனெனில் குழந்தையின் சருமத்துக்கு ஏற்ப மென்மையாக இருப்பதால் “அலர்ஜி” ஆகாது;துவைத்து காயப் போட்டாலும் விரைவில் மறு பயன்பாட்டுக்கு துணி ஆயத்தமாகி விடும்;

ராஜா வீட்டில் பிறந்த குழந்தையானாலும் பிறந்தவுடனே பட்டுத் துணி போர்த்தமாட்டார்கள்; ஒரு வேளை இறந்து பிறந்தால் போர்த்துவார்கள்; பிரசவத்தின் போது வெளிப்படும் அதிகப்படியான இரத்தப்போக்கையும் அதை சுத்தம் செய்ய கழுவும் தண்ணீரையும் எளிதில் உறிஞ்சக் கூடிய துணிகளையே பயன்படுத்த முடியும்; உடனே துடைக்காவிட்டால் தாய்க்கு “ஜன்னி” ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம்;

எல்லாவற்றுக்கும் மேலாக வானம் பூமியை படைத்த பராபரன் ஒருவரும் சேரக்கூடாத ஒளியை வஸ்திரமாக உடுத்திக் கொண்டிருப்பவர் என்னைப் போன்ற சாதாரண பரதேசி கோலத்தில் நான் அணிந்தது போலவே கந்தைத் துணியினைப் (கிழிக்கப்பட்ட நீண்ட வஸ்திரம் என்றும் கொள்ளலாம்..!)போர்த்தியவராக (ஆதாமின் நிர்வாணம் மூடியவர்..!)கால்நடைகளுக்கு தீவனம் வைக்கும் தொட்டியில் கிடத்தப்பட்டிருப்பாராம்;

இதுவே தூதனால் மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்ட அடையாளத்துடன் கூடிய நற்செய்தி;அது மேய்ப்பருக்கு அறிவிக்கப்படக் காரணம் இந்த குழந்தையைப் அவர்கள் பார்க்கும்போது தெரியவரும்;ஏனெனில் தங்கள் வீட்டு குழந்தை பிறந்தபோது காணப்பட்டதை விட அல்லது அதற்கொத்த சூழ்நிலையில் தங்களில் ஒருவராக ஒருவர் பிறந்திருக்கிறார்;இதுவே நற்செய்தியாகும்;

“நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள்”

இது மேய்ப்பருடைய அறிக்கை;எனவே இதில் பிழையிருக்க வாய்ப்பில்லை;அதாவது கர்த்தரால்- தூதனால்- மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்டது;

“அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு….” (மத்தேயு.2:11)

The wise men's home..!

மத்தேயு குறிப்பிடும் சூழ்நிலை இயேசுவானவர் பிறந்து சில வருடங்கழிந்ததாகவும் இருக்கலாம்;ஏனெனில் குழந்தை என்று குறிப்பிடாததும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொலைசெய்ய ஏரோது கட்டளையிட்டதும் கவனிக்கப்படவேண்டும்; அகுஸ்து ராயன் காலத்துக்கும் ஏரோது ராஜாவின் காலத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் ஆராயவேண்டும்;

‘சத்திரத்தினருகில் தொழுவத்தில் பிறந்தார்’ என்று லூக்காவும்
‘வீட்டிலிருந்த போது சாஸ்திரியர் வந்தனர்’ என்று மத்தேயுவும் குறிப்பிடும் காலமும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கருத்து.