கிறிஸ்மஸ் சர்ச்சைகள் ஏன்..?

// “அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே இடமில்லாதைருந்த படியினால், பிள்ளையைத் துணிகளிலே சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்” லூக்2:7

“அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு….” மத்2:11

“மாட்டுத்தொழுவம்” என்ற வார்த்தையே இங்கில்லாத போது இயேசு கிறிஸ்து மாட்டுத்தொழுவத்தில்தான் பிறந்தார் என்று நம்பிக்கொண்டிருக்கிறது கிறிஸ்தவம்;

மேலும் “கந்தைத்துணியோ கர்த்தருக்கு” என்று பாடல் வேறு; ஒரு யூதஸ்த்ரீ தனது முதல் பிரசவத்துக்கு எப்படி முன்னேற்பாடாக இருந்திருப்பாள் என்று யாருமே யோசிப்பதில்லை; கந்தைத்துணி என்ற வார்த்தையே இல்லை.

சாஸ்திரிகள் வந்து பார்த்தது வீட்டில், நட்சத்திரம் வழிகாட்டியது வீட்டுக்கு….

யோசிக்கலாமே? //

இது ஒரு அறிவடைய விரும்பும் ஒருவரின் ஐயம்..!

My Lord...my GOD..!

“அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்”
(லூக்கா.2:7,11,12)

இது தூதனால் மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்டதான நற்செய்தி; இதனைத் தேர்ந்த கல்வியாளரும் கிரேக்கருமான லூக்கா பதிவு செய்துள்ளார்;

“முன்னணையிலே” எனும் வார்த்தையைத் தான் மாட்டுத்தொழுவம் என்கிறோம்;ஆங்கிலத்தில் “manger” எனப்படும் இதன் அர்த்தம் தீவனத்தொட்டி எனக் கொள்ளலாம்;

இது சம்பந்தமாக இரண்டு வித புரிதல் உண்டு;ஒன்று,கால்நடை இளைப்பாறுமிடம்;இரண்டு தீவனத் தொட்டி;

யூகமாக இவற்றைக் குறிப்பிடக் காரணம் காலமும் கலாச்சாரமும் மொழி சம்பந்தமான தடைகளுமே;

ஆனாலும் சூழ்நிலை நமக்கு ஓரளவு தெரியவருவதினால் சில‌
உண்மைகளை எளிதாக அறியமுடிகிறது;

சத்திரத்தில் இடமில்லாததால் சத்திரத்துக்கு வந்தவருடைய அந்த கால வாகனமான கால்நடைகள் கட்டிவைக்குமிடத்திலிருந்த சிறு இடத்தில் அவசரமாக ஒதுங்கினர்,கர்ப்பிணியான மரியாளும் அவருடன் வந்த யோசேப்பும்;

பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லை;
பிரசவம் என்பது திட்டமிட முடியாத ஒன்று;
அதாவது நான் “சிசேரியன்” பிரசவ முறை நடைமுறையில்லாத காலத்தைச் சொல்கிறேன்;

மரியாள் யூத பெண்மணியாக இருப்பினும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவளல்ல; மேலும் குடிமதிப்பு எழுத வேறொரு புதிய இடத்துக்கு வந்துள்ளனர்; நண்பர்கள் அறிமுகமானவர்கள் யாரும் அருகிலில்லை; பிரசவ வலி வந்தவுடனே தன்னிடமிருந்த சில துணிகளிலேயே சிலதை கிழித்து பயன்படுத்தியிருக்க வேண்டும்;

இவையெல்லாம் அந்த சூழலை தியானிப்பதால் வரும் யூகமான செய்தியே; நாங்களெல்லாம் எங்கள் தாயாரின் பழைய புடவைத் துணிகளிலேயே வளர்ந்தவர்கள் என்ற உணர்வோடு சொல்லுகிறேன்;

காப்பிணியான ஏழைத் தாய் தான் அதிகம் துவைத்து பயன்படுத்திய தனது பழைய “வாயல்” புடவை துணிகளையே சுத்தமாகத் துவைத்து சேமித்து வைத்துக் கொள்ளுவாள்;பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு அந்த துணிகளே படுக்கை விரிப்பாகவும் இடுப்பில் கட்டும் கந்தைத் துணியாகவும் மாறும்;ஏனெனில் குழந்தையின் சருமத்துக்கு ஏற்ப மென்மையாக இருப்பதால் “அலர்ஜி” ஆகாது;துவைத்து காயப் போட்டாலும் விரைவில் மறு பயன்பாட்டுக்கு துணி ஆயத்தமாகி விடும்;

ராஜா வீட்டில் பிறந்த குழந்தையானாலும் பிறந்தவுடனே பட்டுத் துணி போர்த்தமாட்டார்கள்; ஒரு வேளை இறந்து பிறந்தால் போர்த்துவார்கள்; பிரசவத்தின் போது வெளிப்படும் அதிகப்படியான இரத்தப்போக்கையும் அதை சுத்தம் செய்ய கழுவும் தண்ணீரையும் எளிதில் உறிஞ்சக் கூடிய துணிகளையே பயன்படுத்த முடியும்; உடனே துடைக்காவிட்டால் தாய்க்கு “ஜன்னி” ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம்;

எல்லாவற்றுக்கும் மேலாக வானம் பூமியை படைத்த பராபரன் ஒருவரும் சேரக்கூடாத ஒளியை வஸ்திரமாக உடுத்திக் கொண்டிருப்பவர் என்னைப் போன்ற சாதாரண பரதேசி கோலத்தில் நான் அணிந்தது போலவே கந்தைத் துணியினைப் (கிழிக்கப்பட்ட நீண்ட வஸ்திரம் என்றும் கொள்ளலாம்..!)போர்த்தியவராக (ஆதாமின் நிர்வாணம் மூடியவர்..!)கால்நடைகளுக்கு தீவனம் வைக்கும் தொட்டியில் கிடத்தப்பட்டிருப்பாராம்;

இதுவே தூதனால் மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்ட அடையாளத்துடன் கூடிய நற்செய்தி;அது மேய்ப்பருக்கு அறிவிக்கப்படக் காரணம் இந்த குழந்தையைப் அவர்கள் பார்க்கும்போது தெரியவரும்;ஏனெனில் தங்கள் வீட்டு குழந்தை பிறந்தபோது காணப்பட்டதை விட அல்லது அதற்கொத்த சூழ்நிலையில் தங்களில் ஒருவராக ஒருவர் பிறந்திருக்கிறார்;இதுவே நற்செய்தியாகும்;

“நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள்”

இது மேய்ப்பருடைய அறிக்கை;எனவே இதில் பிழையிருக்க வாய்ப்பில்லை;அதாவது கர்த்தரால்- தூதனால்- மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்டது;

“அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு….” (மத்தேயு.2:11)

The wise men's home..!

மத்தேயு குறிப்பிடும் சூழ்நிலை இயேசுவானவர் பிறந்து சில வருடங்கழிந்ததாகவும் இருக்கலாம்;ஏனெனில் குழந்தை என்று குறிப்பிடாததும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொலைசெய்ய ஏரோது கட்டளையிட்டதும் கவனிக்கப்படவேண்டும்; அகுஸ்து ராயன் காலத்துக்கும் ஏரோது ராஜாவின் காலத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் ஆராயவேண்டும்;

‘சத்திரத்தினருகில் தொழுவத்தில் பிறந்தார்’ என்று லூக்காவும்
‘வீட்டிலிருந்த போது சாஸ்திரியர் வந்தனர்’ என்று மத்தேயுவும் குறிப்பிடும் காலமும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கருத்து.

Leave a comment