விநாயகர் சாலை விபத்தில் அகால மரணம்..!

விநாயகர் என்றும் கணபதி என்றும் பக்தர்களால் அன்போடு புகழப்படும் முச்சந்தி தெய்வம் தனது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார்;அதனை முன்னிட்டு அவரை காசு கொடுத்து வாங்கி ஒரு குட்டி யானை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்னையை நோக்கி வேகமாக வந்தனர் அவரது பக்தர்கள்;

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைக் கடந்து வேகமாக வந்து கொண்டிருந்த குட்டி யானை வாகனத்தின் பின்னால் அதைவிட வேகமாக வந்த தமிழ்நாடு அரசின் விரைவு பேருந்து ஒன்று மெதுவாக வந்து வேகமாக மோதியது;

இதில் நிலைதடுமாறிய குட்டி யானை அதாவது விநாயகரை ஏற்றிவந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது;மோதிய வேகத்தில் மெதுவாக வந்த விரைவு பேருந்தின் முன்பக்க கண்ணாடி  நொறுங்கி சாலையில் விழுந்தது;

எந்த உயிர் சேதாரமும் இல்லை;ஆனாலும் விநாயகர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்;விநாயருக்கு ஏற்கனவே பிராணன் இல்லாததால் பிராணவாயு செலுத்தி உயிர் பிழைக்கச் செய்த முயற்சிகளும் பலிக்கவில்லை;


அவரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி பூஜை மரியாதை செய்து பிறகு ஊர்வலமாகக் கொண்டுச் சென்று கிரேன் மூலம் உடைத்து கடலில் தூக்கிப் போட்டு கொலை செய்வதே பக்தர்களின் வழக்கம்;ஆனால் இங்கே விநாயகர் சாலை விபத்தில் அகால மரணமடைந்தது பக்தர்கள் கண்களில் நீரை வரவழைத்தது;

This slideshow requires JavaScript.

இந்த துயர சம்பவத்தின் பாதிப்பை சிறிதும் உணராத பொதுஜனம் தத்தமது வேலையில் பரபரப்பாக இயங்குவதை துண்டு படத்தில் காணலாம்; இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் நெஞ்சைப் பிளக்கும் செய்தி என்னவென்றால் நெடுஞ்சாலையில் நொறுங்கி விழுந்து அகால மரணமடைந்த விநாயகருடைய உடலில் உள்ளுறுப்புகள் எதுவுமில்லை;உடலின் உட்புறமெல்லாம் காலியாக வெறுமையாகவே இருந்தது; இதனால் ஈரல்,கிட்னி, இருதயம், கண்கள் போன்ற உடல் உறுப்புகளை தானம் கொடுத்து புண்ணியம் தேடும் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்; மற்ற மனிதர்களைப் போல இரத்தம் ஆறாக ஓடவுமில்லை;அவரைத் தூக்கிச் செல்ல ஆம்புலன்ஸோ பக்தர்களோ ஓடிவரவுமில்லை;

இந்த சம்பவம் பக்தர்கள் மனதில் ஆறாத ரணமாகி விட்டது;விநாயகர் தனது வழக்கமான வாகனமான மூஞ்சூறுவின் மீது சவாரி செய்திருந்தால் இத்தனை பரிதாப நிலை விநாயகருக்கு ஏற்பட்டிருக்காது என்று பொதுமக்கள் விழுந்து விழுந்து புலம்பினர்.

2 thoughts on “விநாயகர் சாலை விபத்தில் அகால மரணம்..!

  1. பெற்றோர்களுக்கு உடனே தெரிவித்தார்களா? பாவம் அம்மா,அப்பா எப்படித் தவித்திருப்பார்கள். பரவாயில்லை அடுத்த ஆண்டு மீண்டும் வந்திடுவார் இல்லையா?

  2. வாகனம் மோதி விநாயகர் இறந்தார் என்று கூறி அவரைக் கொச்சைப்படுத்தாதீர்கள் மை லார்ட். தனது பக்தர்கள் கடலில் கரைப்பதற்கு முன்பு அடித்தே கொல்லுவார்களே என்று பயந்து விநாயகர் தாமே குட்டி யானையிலிருந்து குதித்துதான் நொறுங்கிப் போனார். மேலும் எனக்கே அல்வாவா என்று சிலர் சொல்வது போல எனக்கே குட்டி யானையா என்பதும் அவரின் வருத்தமாம்.

Leave a comment