Tag Archive | eci

உலகமயமாகும் திருச்சபை..!


அன்பான நண்பர்களே,

நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையை அடுத்த ஒரு ஊரில் இந்திய சுவிசேஷ திருச்சபையின் ஆலய பிரதிஷ்டை நடைபெற்றது. இந்த ஆல்யமானது மறுநிர்மாணம் செய்யப்பட்டதாகும். அதாவது ஏற்கனவே இருந்த ஆலயத்தை மேம்படுத்தி கட்டியிருக்கிறார்கள்.இதற்காக சபையார் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தைக் கூட தியாகமாகக் கொடுத்திருக்கிறார்கள். கிறிஸ்தவம் என்றாலே வெளிநாட்டு பணத்தில் நடைபெறுவது எனும் எண்ணம் இன்னும் நமது சமுதாயத்தில் இருக்க இதன் பின்னணியில் உள்ள வேதனைகளும் தவிப்புகளும் யாருக்கும் தெரிய நியாயமில்லை. கிராமத்திலோ நகரத்திலோ ஒரு  ஆலயம் கட்டப்படுவதற்கு அதன் தலைமை பீடமான பேராயமோ குருசேகரமோ பெரிய உதவிகள் எதுவும் செய்கிறதில்லை.ஆலயத்தின் உறுப்பினர்களான குடும்பங்களே அதை முன்னின்று செய்கிறார்கள். போதாக்குறைக்கு பேராயரை வரவேற்று பெருமைப்படுத்தும் செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டியதிருக்கிறது.

இந்நிலையில் இத்தனை தியாகத்துடனும் கடவுள் மீதான அன்புடனும் எல்லாவித இறையச்சத்துடனும் நடைபெறும் இக்காரியத்தில் ஆடம்பரங்களும் ஆர்ப்பாட்டங்களும் பொதுமக்களை முகம் சுளிக்கவைக்குமோ என்பது நம்முடைய எண்ணமாகும். ஒரு காரியத்தை குறைசொல்லுவதல்ல நம்முடைய நோக்கம் அந்த காரியம் இறைவனுடைய பார்வையில் ஏற்புடையதாக இருக்கிறதா என்பதே நம்முடைய கேள்வி.

பவுலடிகள் சொல்லுகிறார்,

    ரோமர் 12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

-என்பதாக.  எனவே கிறிஸ்துவுக்காக நிற்பதாகச் சொல்லிக்கொள்ளும் நாம் ஆர்ப்பாட்டங்களையும் கொண்டாட்டங்களையும் பதாகைகளையும் தவிர்த்துவிட்டு தியாகத்தையும் உண்மையையும் மையமாகக் கொண்டு இயங்கவேண்டும். ஏனெனில் நம்மை பார்க்கும் மக்கள் நம்மில் இயேசுவைப் பார்க்கவேண்டும் என்பதே நம்முடைய இரட்சகர் நமக்காக நியமித்துள்ள இலக்காகும். ஒருவேளை உலக மக்களுக்கு பட்டாசுகளும் ஒரு மனுஷனைப் போற்றித் துதிக்கும் பேனர்களும் வரவேற்புகளும் ரதங்களும் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது நமக்கு தகுதியல்லவே,இதை எப்படி பேராயமும் குருசேகரமும் அனுமதிக்கிறது என்று புரியவில்லை.

பல இலட்சம் செலவில் அமைக்கப்படும் முகப்பு கோபுரத்துக்கும் மணிகூண்டுக்கும் செய்யப்படும் செலவில் இன்னொரு ஆலயத்தையே கட்டிவிடலாம்.அல்லது நாலைந்து ஏழை பிள்ளைகளுக்கு திருமணம் செய்யலாம்.அல்லது ஏழெட்டு ஏழை மாணவர்களைப் படிக்க வைக்கலாம். திருச்சபையானது இனியும் இதுபோன்ற காரியங்களில் இறைவனை முன்னிட்டு படைக்கப்படும் புனிதமான காணிக்கைகளை செலவிடாமல் எச்சரிக்கையுடனிருக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இறுதியாக ஒரு சிந்தனை, சுமார் 20 வருடத்துக்கு மேலாக குறிப்பிட்ட சபை ஒரு பகுதியில் இருக்கிறது.குருவானவர்,கமிட்டியார் மற்றும் விசுவாசிகள் உட்பட பலர் வருகிறார்கள்,பலர் போகிறார்கள்.ஆனாலும் அந்த சபையானது சமுதாயத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அந்த சபையில் பங்கேற்கும் குடும்பங்களின் சராசரி எண்ணிக்கை மாறவேயில்லை. இப்படியிருக்க எப்படி எதை முன்னிட்டு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்து விழா எடுக்க மனம் வருகிறது என்று புரியவில்லை. இயேசுவுக்காக இதையெல்லாம் செய்கிறோம் என்போமானால் நடைபெற்ற நிகழ்ச்சியில் எந்த இடத்தில் இயேசு மகிமைப்பட்டார் என்று நாம் யோசிக்கவேண்டும்.

இங்கே சொல்லப்பட்டிருப்பவையெல்லாம் ஒரு சாம்பிளுக்கு தான். திருச்ச்பையின் தற்கால நிலைமைக்கு இவையெல்லாம் ஒரு உதாரணம் மட்டுமே.  கிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தமாவதாக சொல்லிக்கொள்ளும் நாம் இனியும் இதுபோன்ற காரியங்களில் நமது பெலனையும் நற்பொருளையும் செலவழிக்காமல் வேத வசனத்துக்கு அஞ்சி நடந்து திருச்சபை முன்னோடிகளின் மரபுகளை மீட்டெடுக்கவும் அதன்படி நடக்கவும் வேண்டும்.

This slideshow requires JavaScript.

சாலமோன் ராஜாவைவிட பிரம்மாண்டமான ஆலயத்தை சர்வ வல்ல தேவனுக்காகக் கட்ட ஒருவராலும் கூடாது. தேவனுடைய மகிமை இறங்கி தங்கியிருந்த அதுபோன்றதொரு ஆலயமும் வேறு இருந்ததில்லை.அந்த மேன்மைமிகு ஆலயமே தீக்கிரையாக்கப்பட்டு மண்மேடானதே. எனவே வேதமும் சொல்லுகிறது,

அப்போஸ்தலர் 7:48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.

அப்போஸ்தலர் 17:24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.

யோவான் 8:32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

Advertisements