சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு..?

ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது..!

69 நாட்கள் பூமிக்கடியில் 2000 அடி ஆழத்தில் 33பேர் உயிர்பிழைத்தது எப்படி?

அண்மையில் சுரங்கத்தில் சிக்கி  69 நாட்களாகத் தவித்த‌  33 தொழிலாளர்களை சிலி நாட்டு அரசாங்கம்  ‘நாசா ‘வின் உதவியுடன் மீட்டதை அனைத்து ஊடகங்களிலும் கவனித்தோம் .

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=317687&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

இந்த செய்தி முதலில் எனது சிந்தைக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவே இல்லை; வழக்கமான செய்தியைப் போல‌ கண்டும் காணாமல் இருந்திருக்கிறேன்;

கடந்த 69 நாட்களாக அந்த தொழிலாளர்களுடைய உயிர் தவிப்பையும் அவர்தம் உயிரின் அருமையுணர்ந்து அவர்களை மீட்கப் போராடிய சிலி அரசின் பொறுப்பையும் அறிந்து கொண்டாலும் இந்த 69 நாட்களும் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் ? என்னைச் சுற்றி நடக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு நான் அன்னியமானதைக் குறித்து வருந்துகிறேன்;அது எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது குறித்து ஆச்சரியப்படுகிறேன்; அதைக் குறித்து யோசித்ததுமே என் மனதில் எழுந்த கேள்வி இதுதான் , 69 நாட்களும் அவர்கள் எப்படி உணவுக்கும் தண்ணீருக்கும் போராடியிருப்பார்கள் என்பதே.

இதைக் குறித்த செய்தியைத் தேடியறிந்ததும் ஆச்சரியமாக இருந்தது;அந்த தொழிலாளர்களுடைய மன உறுதியுடன் கூடிய ஒழுக்கத்தையும் அறிந்தேன்;

http://uk.news.yahoo.com/38/20101013/twl-q-a-how-did-the-chilean-miners-survi-6ae0455.html

என்ன சாப்பிட்டனர்?

சுரங்கத்துக்குள் சென்ற தொழிலாளர்களுக்கு வெளியுலகத் தொடர்பு கிடைப்பதற்கு முன்னர் சுரங்கத்திலிருந்த‌ அவசரகால உணவு கிடங்கிலிருந்த சொற்ப உணவை மிக மிக சிக்கனமாக செலவழித்தார்களாம்;

எப்போது உதவி வரும் என்று தெரியாத நிலையில் பூமிக்கடியில் சுமார் 2257 அடி (688மீட்டர்) ஆழத்திலிருந்த அவர்கள் தாம் உயிர்வாழத் தேவையான மனோதிடத்துடன் உணவு கையிருப்பையும் திட்டமிட்டது கவனிக்கத்தக்கது;

ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி மீன் உணவையும்  (tuna) ஒரு (சிப்) மிடறு பால் ஒரு கடி பிஸ்கட் (Crackers) துண்டு மற்றும் சின்ன “பீச்சஸ்” (peaches) பழத்துண்டு மட்டுமே உணவாக உட்கொண்டாராம்;


17 நாட்களுக்குப் பிறகு மீட்பு குழுவினர் அவர்களை அடைந்ததும் (அதற்கும் 17இடங்களில் துளைபோட்டு தேடினராம்..) ஹைட்ரஜன் ஜெல், சூப் மற்றும் சில மருந்துகளை  “புறாக்கள் “ (doves) எனப்படும் ப்ளாஸ்டிக் குழாய் மூலம் அனுப்பினர்;

அவர்களுடைய சூழ்நிலை எப்படியிருந்தது?

உஷ்ணமும் ,இருளும் சூழ நெருக்கமான சிறிய இடத்தில் சிக்கியிருந்த அவர்கள் படுத்துறங்க படுக்கைகள் இல்லாவிட்டாலும் 30 நாற்காலிகள் சில பெஞ்சுகளும் கொஞ்சம் போர்வையும் இருந்தது ; 530 சதுர அடி சுற்றளவுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் இருந்தனர் .

அங்கே போதுமான பிராண வாயு கிடைத்தது ;இதுவே நிலக்கரி சுரங்கமாக இருந்திருந்தால் விளைவுகள் பயங்கரமாக இருந்திருக்கும் ;இது (தாமிரம் மற்றும் தங்க )உலோக சுரங்கமாதலால் அங்கே ஆபத்தான மீத்தேன் வாயுக்கள் இருக்கவில்லை .

அவர்கள் ஆரோக்கியமாக இருந்தது எப்படி?

17 நாட்கள் தவிப்புக்குப் பிறகு ஆகஸ்டு 23 ந்தேதி மீட்புகுழுவினரின் தொடர்பு கிடைத்ததும் தொழிலாளர்கள் தங்கள் தேசிய கீதத்தைப் பாடி மகிழ்ந்தனர்; மீட்பு குழுவினர் சத்துமாத்திரைகளையும் ஊக்க மாத்திரைகளையும் அனுப்பி அவர்களுடைய ஜீரண உறுப்புகளை சகஜநிலைக்குக் கொண்டுவந்தனர் .

இதனிடையே மீட்பு குழுவினரின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது ;அவர்களில் தகவல் தொடர்பு நிபுணர்கள் ,மருத்துவர்கள்,மனோதத்துவ நிபுணர்கள் ,சமையல் மற்றும் துணி துவைப்போர் குழுவினரும் அடக்கம் ;மேலும் தொழிலாளர்களுடைய நாடித் துடிப்பையும் ஆரோக்கியத்தையும் கண்காணிக்கும் வயர்லெஸ் சாதனங்களும் தருவிக்கப்பட்டிருந்தது ;இதன்மூலம் குழாய் வழியே அனுப்பப்பட்ட “பையோமெட்ரிக் பெல்ட் ” எனும் சாதனத்தின் மூலம் தொழிலாளர்களுடைய உடல்நலம் கண்காணிக்கப்பட்டது .

மீட்புக் குழுவினர் அவர்களை நெருங்குவதற்கு முன் சுரங்கத்தினுள் முகாமுக்கு அருகே தொழிலாளர்கள் ஒரு தற்காலிக கழிப்பறையை அமைத்திருந்தனர் ;அதன் காரணமாக வயிற்றுப்போக்கு, காலரா, இரத்தக் கட்டி, இவற்றால் உடலுறுப்பு செயலிழத்தல் ஏற்பட்டிருக்குமோ என்று மீட்புக் குழுவினர் அச்சப்பட்டனர் ;ஆனால் தெய்வாதீனமாக அதுபோல எதுவும் நடைபெறவில்லை .

இந்த நிலையிலும் சிகரெட் மது போன்ற போதைவஸ்துக்களைக் கோரிய தொழிலாளர்களுக்கு அது மறுக்கப்பட்டது ;ஆனாலும் நிகோடின் கம் போன்ற மாற்று பொருட்கள் தரப்பட்டது .

அவர்கள் வெளியுலகைத் தொடர்பு கொண்டது எப்படி?

ஆங்காங்கு துளையிட்டு தேடிக்கொண்டிருந்த கருவியின் முனையானது ஆகஸ்டு 22 -ந்தேதி குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு துண்டு சீட்டானது மீட்பு குழுவினரைக் கொண்டாட வைத்தது ;அதில்,“நாங்கள் 33 பேரும் பத்திரமாக இருக்கிறோம் ” என்று இருந்தது ;

சுரங்கத்துக்குள் மற்றொரு குழாய் மூலம் பைபர் ஆப்டிக் தொடர்பு வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் தரப்படும் வரைக்கும் “டவ்ஸ்” எனும் குழாய் வழியே உறவினர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர்;

அவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறை எப்படி இருந்தது?

மீட்புகுழுவினர் அவர்களை அடைந்ததும் அவர்களுக்கு காலை ,மதிய ,இரவு உணவு மற்றும் மாலை தேனீர் வழங்கப்பட்டது ; 500 வாட் மின்சாரத்தின் உதவியுடன் விளக்குகளைப் பொறுத்தி அதன்மூலம் பகலையும் இரவையும் அவர்களுக்கு உணர்த்தினர் ;

மனோதத்துவ நிபுணர்கள் அவர்களுக்கு சில எளிமையான உடற்பயிற்சிகளை ஒழுங்கு செய்திருந்தனர் ;இதன்மூலம் தொழிலாளர்களுடைய உடல்திறன் மற்றும் உடல் வாகு பேணப்பட்டது ; இதன்மூலம் குறுகலான மீட்புகுழாயினுள் அவர்களுடைய பொருந்த முடியும் ;

அண்மை வாரங்களில் உள்ளேயிருக்கும் தொழிலாளர்களும் மீட்புகுழுவுக்கு உதவினார்கள்  ;அவர்கள் சுரங்கத்தினுள் அவ்வப்போது சேரும் இடிபாடுகளை அகற்றிக் கொண்டே இருந்தார்கள்  .

அவர்கள் தம்மை உற்சாகப்படுத்திக்கொண்டது எப்படி?

தொழிலாளர்களில் பெரும்பாலானோர் கால்பந்து இரசிகர்கள் ;அவர்களில் ஒருவர் தொழில்ரீதியாக கால்பந்து விளையாடுபவர் ;எனவே அவர்களை மகிழ்விக்க கேபிள் இணைப்பு மூலம் சிலி உக்ரைன் நாட்டுடன் மோதும்  நட்புணர்வு  கால்பந்து போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது ;மேலும் பீலே மாரடோனா போன்ற பிரபலங்களின் வீடியோ தொகுப்பும் அனுப்பப்பட்டது ;

இன்னும் சீட்டாட்டம் மற்றும் டொமினோ போன்ற விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ;மேலும் சிறிய வடிவிலான இசைக் கருவிகளும் பைபிளும் போப் பெனடிக்ட் ஆசீர்வதித்த ரோசரிகளும் வழங்கப்பட்டிருந்தன‌ .

ஒரு தொழிலாளியிடமிருந்த உயர்தொழில்நுட்ப வீடியோ காமிரா மூலம் அவர்களுடைய தவிப்பும் போராட்டமும் இன்னும் அவர்கள் பகிர்ந்துகொண்ட திரைப்பட நகைச்சுவை அனுபவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது .

இந்த இராஜ மரியாதையையும் புகழும் நமக்கு கிடைக்கவில்லையே என்று மற்றவர் ஏங்குமளவுக்கு அத்தனை வசதிகளுடனும் பாதுகாப்பாக இருந்தனர் ; இன்னும் அவர்களில் சிலர் ஏன் மீட்கப்பட்டோமோ என்று நினைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை ;அந்த அளவுக்கு அவர்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டனர்;

அவர்கள் மீட்கப்பட்டது எப்படி?

21 அங்குல சுற்றளவுள்ள மீட்கும் குழல் “சிலி “தேசிய கொடியின் வர்ணம் பூசப்பட்டு ஒவ்வொரு தொழிலாளியையும் மீட்க ஆயத்தமானது ;அதனுள் ஒரு டாங்கி நிறைவான காற்று அடைக்கப்பட்டு , தகவல் தொடர்புக்கான மைக்ரோபோன் பொருத்தப்பட்டு ,வேகமாக மேலே தூக்கப்படும் தொழிலாளியின் இதயத் துடிப்பையும் சுவாசத்தையும் கண்காணிக்கும் மானிட்டர் இணைப்புடன் இருந்தது .

தொழிலாளி மேலேறி வர பயணிக்கவேண்டிய உயரமானது ஈஃபில் கோபுரத்தைப் போல இருமடங்கு உயரம் என்று சொல்லப்படுகிறது ;மீட்பு குழல் மேலேறி வர அரைமணிநேரத்துக்கும் குறைவாக ஆனது ; அது தடையின்றி உள்ளே செல்ல‌ அந்த குழலின் வெளிப்புறத்தில் சிறு சக்கரங்கள் பொருத்தப்பட்டு இராட்சத கிரேன் மூலம் இயக்கப்பட்டது .

தொழிலாளர்கள் மீட்கப்படும் முதலாவது நபரை எப்படி தேர்ந்தெடுத்தனர்?

செப்டம்பர் மாத இறுதியில் சிலியின் சுகாதார அமைச்சர் மீட்பு குழுவின் வல்லுனர் மற்றும் மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசித்து தொழிலாளர்களில் யார் மிகவும் உடலாலும் மனதாலும் பெலவீனமாக இருக்கிறாரோ அவரை முதலாவது மீட்க முடிவுசெய்திருந்தனர் ;ஆனால் தொழிலாளர்களோ யார் கடைசியாக வெளியேறுவது என்பதில் போட்டி போட்டனர் ;அதிசயம் ஒன்றுமில்லை , அவர்களில் யார் அதிக நாட்கள் பூமிக்கடியில் இருந்தனர் என்பதில் கின்னஸ் சாதனை செய்ய விரும்பியதுதான்.

இப்படியும் ஒரு சாதனை..?

ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?

எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்

“அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். (Psa 107:24 )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s