Archive | February 2010

Water baptism..?

http://www.destinedtowin.org/devotional.php

Many church leaders teach water baptism to be nothing but a point of identification to the resurrected life of Christ. This is not correct. Water baptism is a powerful weapon against the carnal mind.

தவித்துப்போன விஜயா..!

விஜயா கடந்த ஒரு மாதமாகத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களுடைய வேலைக்காரி தனது மகளுடைய பிரசவத்துக்காக ஊருக்குச் சென்றவர்கள் இரண்டு மாதமாகியும் இன்னும் வந்துசேரவில்லை;

இந்நிலையில் இன்று கணவனுடைய வற்புறுத்தலின் காரணமாக LIC முகவர் பயிற்சிக்காகச் சென்றாகவேண்டும்; அது பிடிக்காததுடன் வீட்டையும் பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளை யார் கவனித்துக் கொள்ளுவார்கள் என்று கவலை..!

முதலில் அவர்கள் LIC முகவர் பணிக்குச் செல்லுவது ஒருவகையில் அவர்களுடைய தனிமை உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக இருக்கும் என்று சொல்லி அதற்காக அவர்களை ஆயத்தப்படுத்தினேன்; இதன்மூலம் நீங்கள் சுதந்தரமாக வெளியே செல்லவும் அதினால் வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் அநேகருக்கு ஆண்டவருடைய அன்பைப் பகிர்ந்துக் கொள்ளவும் முடியும் என்று சொன்னதும் சந்தோஷப்பட்டார்கள்; ஆனால் இன்னும் வேலைக்காரி வராததைக் குறித்துத் தொடர்ந்து அரற்றிக் கொண்டேயிருந்தார்கள்;

திடீரென்று நேற்று போன் செய்த போது பயத்துடனே (தொல்லை..?!) போனை எடுத்தேன்;  எடுத்தவுடனே வழக்கம்போல, “ஐயையோ, தூங்கறீங்களா, தொல்லைபண்ணிட்டேனா” எனவும் நான் சற்று கோபத்துடன்  “பரவாயில்லைமா, விஷயத்தைச் சொல்லுங்க” என்றதும் மிகச் சாதாரணமாகச் சொன்னார்கள், “போன வெள்ளிக்கிழமை வேலைக்காரி வந்துட்டாங்க,  இன்றைக்கு முகவர் பயிற்சிக்காகச் செல்கிறேன்,  ஜெபித்துக் கொள்ளுங்கள்”
என்றதும் நான் சற்று கண்டிப்புடன் சொன்னேன்,  “நான் முன்பே சொன்னேனல்லவா,  நீங்கள் கவலைப்பட்டதெல்லாம் வீணாகிப்போனதே,  இப்போதாவது ஆண்டவரை நம்புவீர்களா, அவருக்கு எல்லாம் தெரியுமல்லவா,  எனவே சொல்லுகிறார், ‘ தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள் ‘ என்று; மரியாள் அதைக் குறித்து தெளிவாக அறிந்திருந்தாள்;

நாம் கூட ஒரு பல்பொருள் அங்காடிக்குச் செல்லுகிறோம், அங்கே இருக்கும் அனைத்து பொருட்களையும் வாங்க முயற்சிப்போமா, நமக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்ளுகிறோம்;

இப்படியே நமது அன்றாட வாழ்விலும் நமக்கு துன்பத்தைத் தரக்கூடிய நமது சக்திக்கு மீறிய காரியங்களைக் குறித்து கவலைப்படுவதை விட்டு விட்டு ஆண்டவருடைய செயல்பாட்டுக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுத்துவிட்டு நம்பிக்கையுடன் அமர்ந்திருக்க வேண்டும்” என்று கூறினேன்.

வெற்றித் திருமகள் உன்னைத் தேடி..தேர்வு எழுதும் மாணவர்களுக்காக…

பெற்றோருக்கு ஒரு வார்த்தை…

இது உங்களுக்கும் உங்கள் கண்மணிக்கும் சோதனையான கட்டமாகும்;  இந்த நேரத்தில் இருதரப்பும் பதட்டமாகவே இருக்கும்; ஆனால் நீங்கள் தான் சற்று பொறுமையாக இருந்து உங்கள் பிள்ளையை ஆதாயப்படுத்த வேண்டும்; உங்கள் கண்மணியைக் கோபப்படுத்த வேண்டாம்; விரட்ட வேண்டாம்; குற்றப்படுத்த வேண்டாம்; நல்ல வார்த்தைகளைச் சொல்லி தைரியப்படுத்துங்கள்; உயர்த்தி பேசுங்கள்; நீங்கள் கடவுளை நம்புவதால் அவர் நிச்சயமாக நன்மை செய்வார்; அற்புதம் என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே; அற்புதம் என்பதை ‘மேஜிக்’ போல யாரும் திட்டமிட்டு செய்யமுடியாது;எனவே மனந்தளராமல் சிறந்த வாய்ப்புக்காகப் போராடுங்கள்,உங்கள் கண்மணியுடன் இணைந்து..!
தொடர்ந்து வாசிக்க…


இயேசுவின் இரத்தத்தால் மட்டுமே விடுதலை..!

அண்மையில் என்னிடம் ஒரு தாயார் தனது மகள் மற்றும் மகனுடன் பிரார்த்தனைக்காகச் வந்திருந்தார்கள்; அந்த தாயார் அதற்கு முன்பு மகனுடன் வந்திருந்தபோது அவர்களது சரீர பெலவீனத்துக்காக பிரார்த்தனை செய்து அனுப்பியிருந்தேன்;

ஆனாலும் அவர்களது மகள் நம்பிக்கையில்லாமல் மலையனூர் அருகே உள்ள பிரபலமான கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறாள்; அங்கேயிருந்த பூஜாரி ஒருவன் ஏதேதோ சொல்லி மிரட்டி 10000 ரூபாயை எடுத்து வரச்சொல்ல விடுதலை கிடைத்தால் போதும் என நகையை அடகு வைத்து எடுத்துச் சென்று கொடுத்தார்களாம்;

நிலைமை முன்பைவிட இன்னும் மோசமாக அலறிக் கொண்டே என்னிடம் வந்தனர்; வேறு ஏதேதோ ஏவல் சக்திகளை அவர்கள் மீது ஏவிவிடவும் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவரை அவை அலைக்கழிக்க இரவெல்லாம் நிம்மதியில்லாமல் பயத்தில் இருந்தார்களாம்;

வீட்டிலிருந்த ஆண்களையும் அவை விடவில்லை என்பது தான் ஆச்சரியம்; ஏனெனில் பெண்களுக்கு மட்டும் என்றால் அது மூடநம்பிக்கை எனலாம்; பிரமை எனலாம்;ஆனால் 10வது படிக்கும் வாலிபன் முதலாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்;

பணத்தை பிடுங்கிக் கொண்ட அந்த பூஜாரி நீ இங்கே பார்த்தத வெளிய சொன்னா உன் உயிரை எடுத்துடுவேன் என்று மிரட்டியும அனுப்பியிருப்பதால் தான் அங்கே பார்த்தத சொல்லமுடியாமலும் அதை மறக்கமுடியாமலும் மனநோயாளியைப் போல இருக்கிறார்கள்; அந்த பெண்ணின் பெயர் ஜெயந்தி.

“பணம் போனால் போகட்டும், அவன் என் மீது ஏவிவிட்ட தீயசக்திகளிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள்” என அழுகிறார்கள்;

அவர்களுடைய குல தெய்வமான அங்காளபரமேஸ்வரி எனும் தெய்வமும் ஒரு புறம் வந்து மிரட்டுகிறதாம்; அதுவும் இவர்கள் மீது ஏதோ கோபத்தில் இருக்கிறதாம்;

இது போன்ற அப்பாவி மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து அவர்களுடைய மூடநம்பிக்கைகளிலிருந்து அவர்களை விடுவித்து என்னைப் போன்றவர்கள் செய்யும் ஊழியமே மதமாற்றம் எனப்படுகிறது;

இன்று என் கண்முன்னே அவர்களே தன் கைகளில் கட்டியிருந்த கயிறுகளை அறுத்தெறிந்தார்கள்; “வீட்டில் எந்த பூஜையும் செய்கிறதில்லை;எல்லாம் போதும் போதும்’னு ஆயிடுச்சி” என்கிறார்கள்;

இப்போதைக்கு செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் காலையில் வரச் சொல்லி இறைவாக்கையும் ஆசியையும் வழங்கி அனுப்புகிறேன்; தற்போது தைரியமாக இருக்கிறார்கள்;

ஒரு முக்கியமான விஷயம், இன்னும் அவர்களிடமிருந்து நான் ஒரு பைசாவும் வாங்கவில்லை; தொழில் செய்யும் அந்த தாயாரின் மகனான சரவணனுக்கு நான் தான் அவனது தொழில் சிறக்க பத்து ரூபாயை ஒரு புதிய ஏற்பாடு புத்தகத்தில் வைத்து கொடுத்தேன்.

தெய்வீக திட்டம்..!

இறைவன் மனிதனை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனே படைத்தார்; அது ஒருபோதும் மாறாதது; நாம் அந்த பரிபூரண தெய்வீகத் திட்டத்தைவிட்டு விலகிச் சென்றாலும் அது நமக்காகக் காத்திருக்கும்;

இதற்கிடையில் நமது சொந்த விருப்பத்தின்படியும் தேர்ந்தெடுப்பின்படியும் ஈடுபட்ட காரியங்களில் சோர்ந்து போனவர்களாக தோல்வி மனப்பான்மையுடன் மனநிம்மதி தேடி இறையடி சேரும்போது கடவுள் அன்புடன் நம்மை சேர்த்துக் கொண்டு தமது திட்டத்தின் நிறைவேறுதலுக்குள்ளாக நம்மைக் கொண்டு வருகிறார்;

அது நித்தியகால‌ திட்டமாதலால் தாமதமாகிறது;
தூரகால திட்டமாதலால் விரைந்தும் வராது..!

ஏக இறைவனுடைய நாமம் “நாராயணனா?”

அநேகர் சொல்வதுபோல சர்வ வல்ல ஏக இறைவனின் தன்மையின் அடிப்படையிலும் பிரிந்துவிட்ட ஆயிரக்கணக்கான மொழிகளின் அடிப்படையிலும் இறைவனுக்கு பல்வேறு நாமகரணங்களைச் சூட்டி வழங்குவதும் அதன் பொருள் ஒன்றாகவே இருப்பது போலவும் தோன்றினாலும் தேவன் தம்மைத் தொழுதுகொள்ளுபவர்களுக்காகக் கொடுத்துள்ள அவருடைய விசேஷித்த நாமத்தை அறிந்து அதன் பெயரில் தொழுதுகொள்ளுவதே சாலச் சிறந்தது…

Pls follow my Forum and give some feed back…

அழகு சிற்பங்களா,விக்கிரகமா..?

அண்மையில் எனக்குப் பிரியமான ஒரு அங்கிள் வீட்டில் வார ஜெபக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளச் சென்றிருந்தேன்; அன்று பார்த்து நான் செய்தியைப் பகிர்ந்துக் கொள்ளவேண்டியதானது;

அழகிய சுவரலங்காரங்களை கவனித்துக் கொண்டே வந்தபோது புதிதான சில குட்டி சிற்பங்களை கவனித்தேன்; அங்கிள் மிகுந்த அழகுணர்ச்சியுடையவர்; அழகிய கலைப்பொருட்களை சேகரிப்பதில் ஆர்வமுடையவர்;

ஆனாலும் இந்த புதிய சிற்பங்கள் என்னை சற்று அதிர்ச்சியும் வைராக்கியமும் கொள்ளவைத்தது; காரணம் நான் ஏற்கனவே இணையத்தில் கவனித்திருந்த எகிப்திய மித்தாலஜி (Egyptian mythology ) சம்பந்தமான சிற்பங்கள் அவை;
Jesus & Horus Parallels – A Christian Response

ஒரு கிறிஸ்தவர் வீட்டில் இவை இருக்கலாமா என்பதே எனது வைராக்கியத்துக்குக் காரணமானது; அவை மிருக உடலும் பெண்ணின் முகமும் பெண்ணின் உடலும் மிருக முகமுமான சிற்பங்கள்;

மேலும் பார்வோன் அரசனின் தோற்ற முகமும் அருகில் பிரமிட் சொரூபமும் மற்றொரு பக்கம் கவனித்தால் நல்ல பெரிய சட்டத்தில் மூன்று பிரமிடுகளுடன் கூடிய பின்னணியில் ஒரு எகிப்திய இளவரசியின் ஓவியமும் மாட்டப்பட்டிருக்க முற்றிலும் அதிர்ந்துப் போனேன்;

ஒருவேளை மோசேயைக் காப்பாற்றிய  நன்றிக்கடனுக்காக இப்படி செய்திருக்கிறார்களா என்று சமாதானப்படுத்திக் கொள்ளப் பார்த்தேன்; வெறும் கலைப்பொருள்தானே என்று ஒதுக்கவும் முடியவில்லை;
இதைக் கண்டிக்க வேண்டும் என்று உந்துதல் வந்துவிட கண்களை மூடி அமர்ந்திருந்தேன்;

சாட்சி நேரம் முடிந்து (Sharing time) செய்தி நேரம் என்னிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டபோது முன்னுரையாக சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, ஏற்கனவே மனதில் ஆயத்தம் செய்த வண்ணமாக இந்த மாத வாக்குத்தத்த வார்த்தையிலிருந்தே இதற்கான பின்னணியை முடிவு செய்துக்கொண்டேன்;

இம்மாதத்துக்கான‌ தியான வாக்கியமாவது,”உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த்திற, நான் அதை நிரப்புவேன்.”(சங்கீதம்.81:10)

அதையே ஆதாரமாக வைத்து முன்னேறினேன்;

“என்னை தயவுசெய்து மன்னிக்கவேண்டும்; இது போன்ற சிற்பங்கள் ஒரு யூதனின் வீட்டில் இருக்காது என்றெண்ணுகிறேன்; ஏனெனில் இதுபோன்ற சிற்பங்களை ஆராதித்து பாவம் செய்து தேவனைக் கோபப்படுத்திய எகிப்தியர் மத்தியிலிருந்தே தேவன் தமது ஜனத்தை விடுவித்தார்; மீண்டும் அவர்கள் அந்த விக்கிரகங்கள் பால் ஈர்க்கப்பட்டபோது சாபம் வந்தது;

நம்முடைய தேசத்திலும் இதைப் போன்ற விகாரமான சிலைகளை தெய்வமாக வணங்குகின்றனர்; அதை அழகுப் பொருட்களாக நம்முடைய வீடுகளில் வைத்துக் கொள்ளுவோமா?

ஒரு பெரிய அழகான ஆடம்பர காரில் (dash board) முன்பு கவனித்தால் இதைப் போன்ற அருவருப்பான கையடக்கமான‌ குட்டி விக்கிரகம் வைக்கப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள்;

யாக்கோபின் நேசத்துக்குரிய மனைவியான ராகேலும் கூட தனது தந்தையின் வீட்டிலிருந்து கொண்டுவந்த சிற்பத்தினால் பெரிய பிரச்சினையை சந்திக்க நேர்ந்தது;

மாத்திரமல்லாமல் யாக்கோபு அனைத்து அணிகலன்களையும் கழற்றி ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப் போட்டபிறகே விடுதலையும் ஆசீர்வாதமும் வந்ததாகப் பார்க்கிறோம்;

எனவே தேவனுக்குப் பிரியமில்லாத அருவருப்பான சிற்பங்களையும் விக்கிரகங்களையும் அழகுப் பொருட்களாக நினைத்து நமது வீடுகளில் வைத்து தேவகோபத்துக்கு ஆளாகாமலிருக்க வேண்டும்” என ஒரே மூச்சில் சொல்லிவிட்டு, பிரசங்க வாக்கியத்தை நோக்கி திரும்பினேன்;

ஜெபம் முடித்து வீட்டுக்கு வந்ததும் யோசித்தபோது சற்று சங்கடமாக இருந்ததால் ஜெபத்தை நடத்திய ஐயாவிடம் போன் மூலம் கருத்து கேட்டேன்; அவர் (ஆயத்தமும் சமர்ப்பித்ததும் -Preparation & Presentation ) பிரமாதம் ‘ என்றெல்லாம் சொல்லிவிட்டு சர்ச்சைக்குரிய இந்த காரியத்தைக் குறித்து, “நீங்கள் சொன்னது சரிதான்,ஆனாலும் தனியாகச் சொல்லியிருக்கலாம், அப்படிப்பார்த்தால் சிலுவை வைப்பதும் தவறுதான்” என்று போட்டாரே, ஒரு போடு..!


சத்தியா புலம்புகிறாள்..!

என்ன இருந்தாலும் நீங்க மனுஷன் தானே…

எல்லா மனுஷங்களுமே கெட்டவங்கதான்…

உங்கள கடவுளப் போல நெனச்சேன்…

கடவுள் மீது சாய்வதாக நினைத்தே உங்கள் மீது சாய்ந்தேன்…

மனசுல இருக்கறதயெல்லாம் மனசுவிட்டு சொல்லவே தைரியமா வந்தேன்… தப்பு பண்ணிட்டிங்க… நீங்கதான் துவங்கினீங்க…

21 வயசுலேயே எல்லாம் முடிஞ்சாச்சு… நான் தப்பு பண்ணிட்டேன்… உங்க பெண்ணாயிருந்து இப்படி நடந்தா விடுவீங்களா…

இப்ப சிரிச்சிகிட்டிருந்தாலும் வீட்டில போய் அழுவேன்…

கிளாஸுக்குப் போகப் பிடிக்கல…

தூக்கம் வரல… கனவும் வரலை…

ரொம்ப இடம் கொடுத்துட்டேன்…

நான் முன்னமே பொறந்திருக்கணும்…

இல்ல நீங்க லேட்டா பொறந்திருக்கணும்…

காசா,எதுக்கு..?  நான் என்ன “அது” மாதிரியா வந்தேன்..?

நான் வரப்போறவனோட எப்படி இருப்பேன்..? அவன் பாவம்…

உங்கள நெனச்சிக்கிட்டு அவனோட இருக்கறதா..?

எப்படி சொல்லிட்டீங்க..!

இளமை திரும்புதோ… கொஞ்சமாவது யோசிக்கவேண்டாமா?

இது எப்படி சரியா வரும்…

சின்ன வயசாயிருந்தாலும் நான் வந்திருப்பேன்…

14‍ அல்லது 18 வய‌சு பொண்ணுங்களாயிருந்தா முழுவதும் ஏமாந்திருப்பாங்கல்ல..?

எச்சரிக்கை, எச்சரிக்கை என முதல் முறையே சத்தம் கேட்டுது…

நான் ஏமாந்துட்டேன்… இனி என்ன செய்வேன்…

அந்த சத்தமும் இப்ப கேக்கறதில்லை…

சரி… சரி… நீங்க ஏன் ஒரு மாதிரியாயிட்டீங்க…

எப்பவும் போல பேசுங்க…

இல்ல நான் தப்பு பண்ணிட்டேன்… ரொம்ப இடம் கொடுத்துட்டேன்…

அடுத்து எப்ப பாக்கலாம்… எப்பவும் போல பேசுங்க…

நிறைய பேசணும்… வேற எதுவும் வேணாம்…

வெளியவே போய் பேசுவோம்… என்னை மறக்கக்கூடாது…

என் கல்யாணத்துக்கு வரணும்… என்னை வெறுக்கக்கூடாது…

என்ன இருந்தாலும் எங்க வீட்டுல சொல்றத எதிர்த்து நான் எதுவும் செய்யமாட்டேன்… செய்யமுடியாது… விட்டு வரவும் முடியாது…

எப்படி பார்த்தாலும் சரியா வராதே… இப்படியாகும்னு நான் நெனச்சி பாக்கலயே… எங்க வீட்டுல யாரும் இது போல கிடையாது…

அன்று ஒரு வினாடி நடந்த ஒரு கெட்ட காரியத்த நினைத்து படிப்பையே இழந்தேன்… ஆனா இப்ப..?

மனசுவிட்டு பேச மட்டுமே உங்களோட வந்தேன்… உங்க பெண்ணாகத் தானே ஏற்றுக்கொள்ளச் சொன்னேன்… இப்படி செஞ்சிட்டீங்களே…!

(வெறும் (?!) முத்தத்தையும் கட்டியணைத்தலையுமே கற்பு போய் விட்டதாக பாவித்து அரற்றும் இளம்பெண்… இது அந்த காலத்து கதையல்ல… நிகழ்கால கற்பனை… “கற்பு” என்பது மனம் சம்பந்தமானது என்பது எத்தனை சத்தியமான‌ உண்மை… இளம்பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்காததையே சாதகமாக்க நினைத்து முன்னேறுவோர்க்கு இது ஒரு எச்சரிக்கை..! )

ஜெயந்தி தனிமையில்…

பொதுவான அழைப்பும், தனிப்பட்ட அழைப்பும்..!

இன்று  சகோதரி ஜெயந்திக்கு ஆலோசனை கூறி பிரார்த்திக்கச் சென்ற போது மேற்கண்ட சிந்தனை வெளிப்பட்டது; அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று 3 நாட்கள் உபவாசமிருந்து பிரார்த்திக்கச் செல்லுகிறார்கள்; அங்கே இவர்களைப் போலவே தமிழ்நாடு முழுவதுமிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருவர்;

திரள்கூட்டத்தின் மத்தியில் இருக்கவேண்டும், அதுவே பாதுகாப்பு என்பது இன்றைக்கு பெரும்பாலான மக்களின் மனோபாவமாக இருக்கிறது;  எனவே அதிக உறுப்பினர் இருக்கும் சபையில் கலந்துக்கொள்ள செல்வதையும் ஆர்ப்பாட்ட இசைவெள்ளத்தில் மூழ்கி ஆராதிப்பதையும் அநேகர் விரும்புகின்றனர்;  இது தவறல்ல.

ஆனாலும் கடவுள் நம்மை தனியே சந்திக்க விரும்புகிறார்; நாமோ தனிமை நேரத்தை கடவுளுக்குத் தருவதே இல்லை; ஆனால் சாதனையாளர்களுடைய வெற்றியின் இரகசியத்தை ஆராய்ந்தால் அவர்கள் தனிமையில் உருவாக்கப்பட்டு பகிரங்கமாகப் போற்றப்பட்டனர்; இதற்கு பைபிளின் வரலாற்று நாயகர்களான புனிதர்களும் விதிவிலக்கல்ல;

“அறையில் ஆடாதவன் அம்பலத்தில் ஆடமாட்டான்” என்னும் பழமொழிக்கேற்ப தன்னைத் தனிமையில் உருவாக்கிக் கொள்ளாதவன் வாழ்க்கையில் சிறப்பானதைச் செய்வது கடினமாகும்; எதோ ஒரு பிரபலமான இடத்துக்குச் சென்று வருவதால் பாவம் தொலைவதோ ஆசீர் பெறுவதோ ஆகாத காரியமாகும்; இதுவும் ஒருவித மூடநம்பிக்கையே..!

இதனைக் குறித்து பொதுவான அழைப்பு,தனிப்பட்ட அழைப்பு என்ற கருத்தில் யோசித்தால், இந்தியாவின் சுதந்தர தின கொடியேற்றுவிழா நடைபெறுகிறது; அதில் பிரதமர் கலந்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு தேசபக்தியினையூட்டும் உரையாற்றுகிறார்; இது பொதுவானதொரு அனுபவமாகும்;

அதே பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட நபருக்கு தனிப்பட்ட அழைப்பு வருகிறது; அவருடன் பிரதமர் விசேஷித்த சில இரகசியங்களைப் பகிர்ந்துக் கொண்டு தனது அன்பையும் உபசரிப்பையும் வெளிப்படுத்துகிறார்; இதனால் அந்த மனிதனுக்குள் ஒருவித திருப்தியுணர்வும் சந்தோஷமும் காணப்படும்; இது தனிப்பட்டதொரு அனுபவமாகும்;

இதுவே மனிதனிடம் கடவுள் எதிர்பார்க்கும் குணாதிசயமாகும்; கடவுள் விரும்பும் ஸ்தானத்திலிருந்து அவர் விரும்பும் நேரத்தில் அவர் எதிர்பார்க்கும் அர்ப்பண இதயத்துடனும் சுயவிருப்பங்களை மறுத்த உணர்வுடனும் காத்திருந்தால் நிச்சயமாகவே கடவுள் எந்த ஒரு சாதாரண மனிதனையும் சந்தித்து தமது தூதுவனாக மாற்ற வல்லவராக இருக்கிறார்..!